இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவருடைய தி பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாகூரில் உள்ள ராணுவ காமாண்டர் இல்லம், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாகூர், ஃபைசாபாத், பண்ணு, பெஷாவர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கராச்சி, குர்ஜன்வாலா, ஃபைசாலாபாத், முல்தான், மர்டான் எனப் பல பகுதிகளிலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கராச்சியில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசு கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் (70) கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியக் கட்சி பிரிந்து, எதிர்க்கட்சியுடன் இணைந்ததால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் தொடர்ந்து பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வந்தார். கடந்த நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் பிரச்சாரத்தின்போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போதே அவர் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர். இம்ரான் கானை சுற்றிவளைத்த அதிரடிப்பபடையினர் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாக் அமைச்சர் விளக்கம்: இதற்கிடையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சனானுல்லா, கைது நடவடிக்கை பற்றி பேசியுள்ளார். இம்ரான் கானை ஊழல் வழக்கில் கைது செய்துள்ளதாக தெரிவித்தார். தேசிய கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதால் கைது செய்துள்ளதாகக் கூறினார்.