சென்னை:
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சேகர் பாபு. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இவர். இவரது மகள் ஜெயகல்யாணி. இவருக்கும், சென்னை ஓட்டேரியை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
மகளின் காதலுக்கு சேகர் பாபு சம்மதிக்கவில்லை என்பதால், இவர்கள் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
காவல் நிலையத்தில் தஞ்சம்:
இதனிடையே, தனது தந்தையின் ஆட்கள் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவர்கள், பெங்களூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸில் அவர்கள் புகாரும் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து, ஜெயக்கல்யாணி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
தந்தையால் ஆபத்து
: அதில், “எனது கணவரின் முன்னாள் காதலிக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. ஆனால், எனது தந்தையின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை வைத்து எனது கணவருக்கு எதிராக புகார் தர நிர்பந்திக்கின்றனர். எனது கணவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். எனது கணவர் மீது போலியான புகார்களும் தருகின்றனர்” எனக் கூறியிருந்தார்.
அதிரடி கைது:
இந்நிலையில்தான், அமைச்சர் சேகர் பாபுவின் மருமகன் சதீஷை சென்னை புளியந்தோப்பு மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு பெண், சதீஷ்குமார் மீது புகார் அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சதீஷ்குமார் மீது அப்பெண் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சதீஷ் குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிககின்றன. அவரை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.