புதுடெல்லி: டெல்லி திஹார் சிறையில் கைதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக காவலர்கள் வேடிக்கை பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில நகரங்களின் முக்கிய தாதாவாக இருந்தவர் தில்லு தாஜ்புரியா (33). டெல்லியின் கலன் கிராமத்தை சேர்ந்த இவர், குஸ்தி பயில்வானாக இருந்தார். தனது 20 வயதுக்கு பிறகு வழிமாறிய இவர், டெல்லியின் முக்கிய தாதாவானார். ரோஹினி நீதிமன்றத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் தில்லு. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி திஹார் சிறையில் இருந்த எதிர் கோஷ்டி கைதிகளால் மிகவும் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்.
திஹார் வளாகத்தின் உயர் பாதுகாப்பு சிறை ஒன்றில் தில்லு அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கும்பல் அவரது சிறையினுள் புகுந்து கத்தியால் குத்தியுள்ளது.
தில்லுவை சிறைக் காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்ற போதும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தில்லு சரமாரியாகக் குத்தப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த பின்பும் சுமார் 90 முறை குத்தப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலை சிறையின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
டெல்லியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சில காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதில் தில்லு தாக்கப்
படும்போது சிறைக் காவலர்கள் சிலர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததும் பதிவாகி உள்ளது. இவர்கள் திஹார் சிறையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்புக் காவல் படையை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 7 காவலர்களை தமிழகத்திற்கு திரும்பப் பெற்று, நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு திஹார் சிறை நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சிறையான திஹார் சிறையில் சுமார் 35 வருடங்களுக்கு முன் வெளிப்புறப் பாதுகாப்பு பணி தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு ரிசர்வ் பட்டாலியன் எனப்படும் தமிழக காவல்துறையின் சிறப்புக் காவல் படை எண் 8 அமர்த்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள், 12 ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1,200 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். திஹார் சிறை வளாகத்தின் வெளிப்புறப் பாதுகாப்பு, மத்திய பாதுகாப்பு படைகளான சிஆர்பிஎப், ஐடிபிபி ஆகியவற்றிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பாதுகாப்பில் தமிழக சிறப்புக் காவல் படை அமர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து மூன்றாம் கட்டப் பாதுகாப்பு டெல்லி ஆயுதப் படையிடம் உள்ளது. சிறை நிர்வாகம் முழுவதும் டெல்லி அரசின் சிறைக் காவலர்களிடம் உள்ளது.
எனினும், தமிழக சிறப்புக் காவல் படையின் சிறந்த பணி காரணமாக படிப்படியாக பல பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது, தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டுவரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தொடர்ந்து பல சம்பவங்களில் தமிழக காவல் படையினர் சிக்குவதும் வழக்கமாக உள்ளது. இதற்கு முன் 2012-ல் சிறை கைதிகள் தப்பியது மற்றும் 2017-ல் சிறையில் நடந்த கோஷ்டி மோதலின்போது தமிழகப் படை யினர் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உயர் பாதுகாப்பு கொண்ட திஹார் சிறையில் தமிழக காவல்படையினர் பணியில் அமர்த்தப்பட்டதற்கு மொழியும் ஒரு காரணமாக உள்ளது. இங்கு வடமாநில காவலர்கள் பணியில் இருந்தால் அவர்கள் கைதிகளுடன் இணைந்து தவறுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்பதால் ஹிந்தி தெரியாத தமிழக காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு: தில்லு தாஜ்புரியாவின் கொலை குறித்து சிபிஐ விசாரணை கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை மற்றும் சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜஸ்மித்சிங், டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். சிறை பாதுகாப்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பல கேள்விகள் எழுப்பினார். திஹார் சிறையின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை கேட்ட நீதிமன்றம், தில்லுவின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.