இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கராச்சி நகரில் லியாகதாபாத் பகுதியை சேர்ந்த வாலிபர் முகமது ஆதில் (வயது 28). இறைச்சி விற்பனை செய்து வந்துள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 30-ந்தேதி முதலில் தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
2 நாட்களுக்கு பின்பு அது தீவிரமடைந்து உள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அன்று முழுவதும் சிகிச்சையில் இருந்துள்ளார்.
அதன்பின்பு, தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிய தொடங்கி உள்ளது. அவருக்கு நடந்த டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புக்கான பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது.
கடந்த 4-ந்தேதி வடக்கு நசீமாபாத் நகருக்கு அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் மே 5-ந்தேதி அவர் மரணமடைந்து உள்ளார் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
அந்த நபர் வீட்டில் எந்தவித விலங்குகளையும் வைத்திருக்கவில்லை. கராச்சியை விட்டு அவர் வேறு எந்த பகுதிக்கும் பயணம் செய்யவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கோ வைரசால் அவர் உயிரிழந்த தகவலை சிந்த் சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இந்த வகை வைரசானது, கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி கடுமையான காய்ச்சல், தசை வலி, வாந்தி மற்றும் உள்ளுறுப்புகளில் ரத்தம் வழிதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதற்கு தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இதுவரை இல்லை. பாகிஸ்தானில் கடந்த 10 நாட்களில் 4-வது உயிரிழப்பு இதுவாகும். கடந்த 2-ந்தேதி குவெட்டா நகரில் 20 வயது இளம்பெண் காங்கோ வைரசுக்கு உயிரிழந்து உள்ளார்.