புதுடில்லி’ஒரு பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அது தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் அரசியல் ரீதியில் கருத்து தெரிவிப்பது முறையானதல்ல.
‘நீதிமன்றத்தின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும்’ என, கர்நாடகா முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து வழக்கில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எந்தத் தவறும் இல்லை
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினரில், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 4 சதவீத இட ஒதுக் கீட்டை ரத்து செய்து, கடந்த, மார்ச், 27ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்தினா, அசானுதீன் அமனுல்லாஜ் அடங்கியஉச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டதாவது:
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், ‘கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்தோம்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தினமும் குறிப்பிட்டு வருகிறார். இதுபோன்று எப்படி அவர் கருத்து தெரிவிக்க முடியும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
‘இதுபோன்று கருத்து தெரிவித்தது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. அதுதான் உண்மையும் கூட’ என, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியதாவது:
ஒரு பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அது தொடர்பாக அரசியல் ரீதியில் பொது நிகழ்ச்சிகளில் கருத்து தெரிவிக்கக் கூடாது. நீதிமன்றத்தின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும்.
அவமதிப்பு
சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, இது பற்றி இந்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டால், அது வழக்கின் வாதமாக இருக்கும். ஆனால், பொது நிகழ்ச்சியில், ஒருவர் அரசியல் ரீதியில் கருத்து தெரிவிப்பது முறையல்ல.
கடந்த, 1971ல், ஒரு வழக்கு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஒரு அரசியல் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.
இவ்வாறு அமர்வு கூறியது.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் உத்தரவை செயல்படுத்த, உச்ச நீதிமன்றம், கடந்த மாதம், 26ல் தடை விதித்தது. அந்தத் தடை தொடரும் என, அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்