மதுரை, தேனி, பழனி ஆகிய நகரங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையின் எதிரொலியாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தது. இது போன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவிய அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய மற்றும் அந்தந்த மாநில நிர்வாகிகளில் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சில நிர்வாகிகளை விசாரணைக்கென அழைத்துச் செல்வது தொடர்கிறது.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற சில செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் மதுரை, தேனி, பழனி, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இன்று சோதனை நடத்தினர். மதுரை நெல்பேட்டை பகுதியிலுள்ள பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா நிர்வாகி, முன்னாள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியுமான அப்பாஸ் வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். மேலும், தெப்பக்குளம் பகுதியில் தமிழன் தெரு பகுதியில் யூசுப் வீடு மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். வில்லாபுரம் பகுதியிலும் ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது, ஆய்வுக்கென சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அப்பாஸ், யூசுப் ஆகியோரை விசாரணைக்கென என்ஐஏ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சோதனையையொட்டி நெல்பேட்டை, தெப்பக்குளம் , வில்லாபுரம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தேனி, திண்டுக்கல்லில் தலா ஒருவர் கைது: தேனி கம்பத்தைச் சேர்ந்தவர் சாதிக் அலி (39), எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். இவரது வீட்டுக்கு அதிகாலை 4.30மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டிலுள்ள பொருட்கள், ஆவணங்கள் சோதனை செய்தனர். செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை கைப்பற்றினர். தகவல் அறிந்த சாதிக் அலியின் உறவினர்கள், கட்சியினர், ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் எஐஏ அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டனர். 4.30 முதல் 3.30 மணி நேரம் நீடித்தது. சோதனை முடிவில் சாதிக் அலியை அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி திருநகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (50). இவர் பழநியில் டீக்கடை நடத்துகிறார். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் மதுரை மண்டலத் தலைவராக உள்ளார். இன்று காலை பழநி வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் முகமது கைசரை அவரது வீட்டில் வைத்து விசாரித்தனர். பின்னர் அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த ஜனவரி மாதம் முகமது கைசர் மற்றும் பழநியைச் சேர்ந்த சதாம் உசேன் (26) உட்பட சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் 3 நாள் பழநி நகர் காவல் நிலையத்தில் வைத்து, கோவை கர்நாடகா கார் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் பிஎப்ஐ குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.