பெங்களூரு:
கடிதம் வெளியானது
கர்நாடக சட்டசபைக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சித்தராமையா எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது. அதில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆக விரும்புவதாக கூறியது எனது ஆதரவாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் சித்தராமையா இதை மறுத்துள்ளார். தனது பெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போலி கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-
சதி செய்துள்ளனர்
எனது பெயரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதப்பட்டதாக ஒரு போலி கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது. இது நான் எழுதிய கடிதம் அல்ல. சில சமூக விரோதிகள் போலி கடிதத்தை எழுதிய எனக்கு எதிராக சதி செய்துள்ளனர். எனக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதலை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்து உள்ளனர்.
அது ஒரு போலி கடிதம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீங்கு விளைவிக்கும் கும்பல் இதை வெளியிட்டுள்ளது. அதனால் இந்த போலி கடிதத்தை நிராகரிக்குமாறு மக்களை கேட்டு கொள்கிறேன். இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் போலீசில் புகார் அளிக்கப்படும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
சித்தராமையா பெயரில் வெளியான இந்த போலி கடிதத்தால் அரசியலில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.