கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் வட மாநிலங்களில் அவ்வப்போது தேசியக் கட்சிகளுக்கு ஷாக் அளிக்கும் ஆம் ஆத்மி, தேதியவாத காங்கிரஸ் மற்றும் ஒவைசியின் AIMIM கட்சிகளும் சில தொகுதிகளில் போட்டியிடுகின்றன. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க, தனிப் பெரும்பான்மை பெற 113 தொகுதிகள் தேவை.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நீடிக்கும் எனைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மாநிலத்தில் மொத்தம் 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,615 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். கர்நாடகாவில் 1985- ஆம் ஆண்டு முதல் எந்த கட்சியும் தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்ததில்லை. இது தொடருமா, இல்லை இந்த வரலாறு மாறுமா என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.