தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவான இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் நாளை மேற்குவங்க மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கரையைக் கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த பாதிப்பும், மழையும் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாகவே புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், தற்போது புயல் உருவாகியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்பது துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.