சென்னை: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த் தாக்கம் காணப்படுகிறது.
எனவே, மஞ்சள் காய்ச்சல் நோய் பரவலை தடுக்க இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படுவர். இது விமான நிலையங்களில் சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் 50 இடங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று இடங்களில் செலுத்தப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலையம் பன்னாட்டு தடுப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இணையதள பதிவு முகவரி: [email protected], www.kipmr.org.in. நேரடி பதிவு நேரம்: செவ்வாய், வெள்ளி காலை 9.30 முதல் 10 மணி வரை.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் திங்கள் மற்றும் புதன்காலை 9.30 மணி முதல் நண்பகல்12.30 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இணையதள பதிவு முகவரி: [email protected], [email protected]. நேரடி பதிவு நேரம்: திங்கள், வெள்ளி காலை 8-9 மணி வரை.
தூத்துக்குடி உலக வர்த்தக அவென்யூ புதிய துறைமுகத்தில் துறைமுக சுகாதார அமைப்பு துறைமுக சுகாதார அதிகாரிஅலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இணையதள பதிவு முகவரி: [email protected]. நேரடி பதிவு நேரம்: செவ்வாய் காலை 10 மணி முதல் பகல் 11 மணி வரை.
இந்த மூன்று இடங்களைத் தவிர, தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை.