உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். இவரின் தந்தை தினக்கூலியாக பணியாற்றிவந்திருக்கிறார். ரவீந்தர் குமாரின் தாயார் வீட்டு வேலை செய்துவந்திருக்கிறார். 6-ம் வகுப்பு வரை படித்த ரவீந்தர் குமார் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருக்கிறார். இதற்கிடையில், பெடோபிலியா (paedophilia) எனும் சிறு குழந்தைகளின் மீது ஆசை கொள்ளும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான், ரவீந்தர் குமார் சிறுவர்-சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யத் தொடங்கியிருக்கிறார். இது குறித்துப் பேசிய கூடுதல் ஆணையர் விக்ரம்ஜித் சிங், “ரவீந்தர் குமார் ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூரம் நடந்து அவனுக்கு விருப்பமான குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வந்திருக்கிறான். இந்த குழந்தை வேட்டை 2008-ம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. அது முதல் அவன் கைது செய்யப்படும் 2015-ம் ஆண்டு வரை சுமார் 30 குழந்தைகளைக் குறி வைத்துக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.
பகல் முழுவதும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இரவு அசந்து தூங்கும் நேரமான இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை இவனது வேட்டை தொடர்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் குழந்தைகளை 10 ரூபாய் நோட்டு அல்லது சாக்லேட் போன்ற தின்பண்டங்கள் மூலம் கவர்ந்திழுத்து, அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட கட்டடத்திற்கோ அல்லது காலியான வயல்வெளிக்கோ அழைத்துச் சென்று தாக்கி மயக்கமடையச் செய்து அவர்களிடம் வன்கொடுமை செய்வான்.
குழந்தை தன்னை அடையாளம் காட்டிவிடுமோ என்ற பயத்தில் பெரும்பாலான குழந்தைகளைக் கொன்றிருக்கிறான். பாதிக்கப்பட்டவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள். அதனால்தான் அவனால் இவ்வளவு காலம் செயல்பட முடிந்தது. முதல் சில வழக்குகளில் அவன் கைது செய்யப்படாததால், அந்த நம்பிக்கையில் மேலும் குற்றங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறான். இந்த நிலையில், ஆறு வயது சிறுமியின் கொலை குறித்து விசாரித்தபோது ரவீந்தர் குமார் மீது காவல்துறைக்குச் சந்தேகம் வலுத்திருக்கிறது.
இதற்கிடையே ஒரு சிறுவன் கடத்தப்பட்டு அவனது ஆணுறுப்பும், கழுத்தும் அறுக்கப்பட்டு, கட்டப்பட்ட நிலையில் கழிவுநீர் தொட்டியிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரவீந்தர் குமார் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்தது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது. அதன்பிறகே டெல்லியின் ரோகிணிக்கு அருகிலுள்ள சுக்பீர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து ரவீந்தர் குமாரைக் கைது செய்து செய்தோம்.
அவனிடம் விசாரித்த போது, 2011-ம் ஆண்டு டெல்லியில் உள்ள கஞ்சவாலா மற்றும் முண்ட்கா ஆகிய இடங்களில் இரண்டு குற்றங்களைச் செய்ததையும், 2012-ம் ஆண்டு அலிகாரில் நடந்த திருமண விழாவின் போது தனது அத்தையைப் பார்க்கச் சென்றபோது உறவினருக்குத் தெரிந்த இரண்டு 14 வயது சிறுவர்களைக் குறிவைத்துத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததையும் ஒப்புக்கொண்டான்.
தனக்கு பிடித்தமான குழந்தைகளைத் தேடி பெரும்பாலும் மற்ற மாநிலங்களுக்கு நடந்தும், சில சமயங்களில் பேருந்துகளிலும் சென்றிருக்கிறான். ஒரே இடத்தில் தொடர் குற்றங்களை அவன் செய்யவில்லை என்பதும் காவல்துறையிடமிருந்து தப்பிக்க காரணமாயிருக்கலாம். அவன் பாலியல் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குறைந்தது 15 இடங்களை எங்களுக்கு அடையாளம் காட்டினான்.
2015-ம் ஆண்டு 24 வயதில் கைது செய்யப்பட்ட ரவீந்தர் குமார், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். நீதிமன்றம் அவனை ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனக் காவல்துறை தரப்பு வாதாடியிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் அவனுக்கான தண்டனை குறித்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.