பணவீக்கத்தை பத்தி பேசாதீங்க… உங்களுக்கு தகுதியே கிடையாது- நிர்மலா சீதாராமன் காட்டம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை புரிந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நிர்மலா சீதாராமன் பேட்டி

அப்போது, பணவீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசுகையில், நாட்டில் பணவீக்கம் ஏற்பட்ட போது நாங்கள் மக்களுக்காக நின்றோம். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனவே இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் பேச கொஞ்சம் கூட தகுதியில்லை. அவர்கள் தங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை திரும்பி பார்க்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்தார்.

பஜ்ரங் தல் தடை

இதையடுத்து பஜ்ரங் தல் அமைப்பிற்கு தடை விதிக்கும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி பற்றி பேசிய போது, இது சுத்த முட்டாள்தனம். நாம் அனைவரும் ஹனுமன் சலிசாவை படிக்கிறோம். பஜ்ரங் பலிக்கு பூஜை செய்கிறோம். ஆனால்
காங்கிரஸ்
கட்சியோ தேர்தல் நேரத்தில் அதை செய்ய பார்க்கிறது. இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பசவராஜ் பொம்மை வழிபாடு

முன்னதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தி விட்டு வாக்களிக்க வந்ததை பார்க்க முடிந்தது. அந்த வகையில் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் உள்ள ஹனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் காவேரியில் உள்ள காயத்ரி கோயிலில் வழிபட்டார். இவர் ஷிகோவன் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பாஜகவிற்கு பெரும்பான்மை

தனது வாக்கை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, நான் வாக்களித்து விட்டேன். என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். நான் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கர்நாடக மக்கள் ஆக்கப்பூர்வமான மேம்பாட்டை விரும்புகின்றனர். எனவே அவர்கள் பாஜகவிற்கு பெருவாரியாக வாக்கு செலுத்தி தனிப்பெரும்பான்மை கிடைக்க செய்வார்கள் என நம்புவதாக பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

5 கோடி வாக்காளர்கள்

கர்நாடகாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் வாக்களிக்க 58,545 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 4 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க 5.3 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அதில் 42.48 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். 11.71 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள். 80 வயதுக்கு மேல் இருப்பவர்கள் 12.15 லட்சம் பேர். 5.71 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.