பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் இரண்டு மணிநேரத்தில் 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது இன்று காலை 9 மணி வரை இத்தனை சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவர்.
தேர்தலில் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள். இந்தநிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த முறை கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கோலார் தங்கவயலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் எஸ்.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஜோதி பாசு, மார்க்சிஸ்ட் சார்பில் தங்கராஜ் ஆகியோரும், புலிகேசி நகரில் பாஜக சார்பில் முரளி, சி.வி.ராமன் நகரில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் குமார் ஆகிய தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.