சென்னை: பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானதுமே, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்களும், பொறுப்புகளும் கூடியுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக “தென்மண்டலம்” ஒரு சவாலாகவே எடப்பாடிக்கு இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த விஷயம்தான், தற்போது நடந்துள்ளது.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், தன்னுடைய நண்பரை சந்தித்து பேசியிருக்கிறார்.
பெரும் அதிர்வலைகள்: தினகரனை ஓபிஎஸ் சந்தித்திருப்பதன் மூலம் 3 விதமான தகவல்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.. அமமுகவில் ஓபிஎஸ் இணைய போகிறார் என்கிறார்கள்.. மற்றொருபுறம், ஓபிஎஸ் தனி அணியாகவே செயல்பட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போகிறார் என்கிறார்கள்.. இன்னொருபுறம், தனக்கென்று ஒரு கட்சி இருந்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையும் ஓபிஎஸ்ஸூக்கு உருவாகியுள்ளது என்றாலும், தனிக்கட்சி ஆரம்பிக்க அவர் தயக்கம் காட்டுவதாகவும் சொல்கிறார்கள்.
இப்படி 3 வகையான யூகங்கள் வலம்வந்தாலும், எதுவுமே உறுதியான தகவலாக தெரியவில்லை.. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிராக ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், அதன் முடிவுகள் எப்படி இருக்க போகிறதென்றும் தெரியவில்லை.. எனவே, தீர்ப்பின் முடிவுகள் உறுதியாகாமல், இறுதியாகாமல், ஓபிஎஸ் எந்த முடிவையும் இப்போதைக்கு எடுக்க வாய்ப்பேயில்லை என்கிறார்கள்.
டிடிவி தினகரன் : அப்படியானால், தினகரனுடனான சந்திப்பு எதைக்குறிக்கிறது? என்ன நோக்கத்திற்காக தினகரனை ஓபிஎஸ் சந்தித்தார்? எதற்காக சசிகலாவையும் சந்திக்க போவதாக ஓபிஎஸ் சொல்கிறார்? போன்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை.. சில திட்டங்கள் ஓபிஎஸ்ஸிடம் இப்போதைக்கு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, நடந்து முடிந்த திருச்சி மாநாடு, மிகப்பெரிய நம்பிக்கையை ஓபிஎஸ்ஸூக்கு ஏற்படுத்தியிருக்கிறதாம்.. இதன்காரணமாகவே, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள போகிறாராம்..
அதேபோல, டிடிவி தினகரனும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள போகிறாராம்.. அதாவது ஆளுக்கொருபக்கம் தனித்தனியாக சுற்றுப்பயணம் செய்வது, தனித்தனியாக மக்களை சந்திப்பது, ஆனால், கருத்தியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் மட்டும் இணைந்தே செயல்படுவதுதான் இவர்களது இணைப்புக்கு காரணம் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் – தினகரன் சந்திப்புக்கு பிறகு, தென்மண்டலங்களின் கலரே மாறியிருக்கிறதாம்.. பலம்வாய்ந்த கூட்டணி போலவும் தோற்றத்தை தந்துள்ளதாம்..
இதன்காரணமாக, எடப்பாடி தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர், தினகரன் – ஓபிஎஸ் பக்கம் தாவவும் யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.. மேலும், எடப்பாடி பக்கம் போய்விடலாமா என்று ஓபிஎஸ் தரப்பில் ஊசலாட்டத்தில் இருந்தவர்களும், இப்போது தங்கள் மனதை மாற்றிக் கொண்டு, ஓபிஎஸ் டீமிலேயே தொடர முடிவு செய்திருக்கிறார்களாம்.
சாத்தியமாகுமா? : அதைவிட முக்கியமாக, டிடிவி தினகரன் தரப்பில் இருப்பவர்களை எடப்பாடி பழனிசாமி அசால்ட்டாக தன் பக்கம் இழுத்து வந்த நிலையில், அந்த இணைப்புகளும் இனிமேல் குறையும் என்கிறார்கள்.. அந்த அளவுக்கு ஓபிஎஸ் – தினகரனின் சந்திப்பானது பெரும் அதிர்வலையை தெற்கில் ஏற்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
இன்னொரு பிளானும் ஓடுகிறது.. விரைவில் கொங்குவில் மாநாடு கூட்டப்போகிறாராம் ஓபிஎஸ்.. எப்படி டெல்டாவை திரும்பி பார்க்க வைத்தாரோ, அதுபோலவே கொங்குவிலும் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த மாநாட்டுக்கு தென்மண்டலம், டெல்டா, வடமாவட்டம் என எல்லா பக்கத்திலிருந்தும் ஆதரவாளர்களை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளாராம். இதற்கெல்லாம் டிடிவி தினகரனின் ஆதரவும் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்றும் பலமாக நம்புவதாக தெரிகிறது. அதற்கான சந்திப்பாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரே தராசு: ஆனால், சசிகலா என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. ஒருவேளை ஓபிஎஸ் பக்கம் அவர் இணைந்துவிட்டால், அதிமுகவில் எப்போதுமே நுழைய முடியாமல் போய்விடும்.. அத்துடன் “சாதி முத்திரையும்” மொத்தமாக குத்தப்பட்டுவிடும் என்பதால், அமைதி காத்து வருகிறாராம்.. எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரையும் ஒரே தராசில் வைத்தே பார்ப்பார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
நடந்து வரும் சம்பவங்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கவனிக்காமல் இல்லை.. காரணம், தினகரனை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி உள்ளது.. அதனால்தான், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்.. அதுமட்டுமல்ல, தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பின் நிகழ்வுகூட, மேலிடத்தின் கண்ணசைவு இல்லாமல் நடந்திருக்காது என்கிறார்கள். அதனால், எடப்பாடி பழனிசாமியின் காய்நகர்த்தல்கள் இனி ஜாக்கிரதையாகவே இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது..
மதுரை மாநாடு: 90 சதவீத கட்சியை தன்னிடம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியால், இந்த ஒரு வருடகாலமாகவே, ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒருத்தரையும் தன் பக்கம் இழுக்க முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.. போதாக்குறைக்கு, இப்போது தினகரனும் ஓபிஎஸ்ஸுடன் இணைந்துவிட்டது, எடப்பாடிக்கு லேசான கலக்கத்தையே தந்துள்ளதாம்.. ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பானது, முக்குலத்தோர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று தந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் மதுரையில் மாநாட்டை கூட்ட உள்ள நிலையில், எந்த அளவுக்கு இதில் தன் பலத்தை நிரூபிக்க போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இதுவரை தன்னுடைய அசாத்திய திறமையாலும், ஆச்சரியமூட்டும் வியூகங்களாலும் எடப்பாடி பழனிசாமி, கட்சியை தன்வசம் வைத்துள்ளார்.. அந்தவரிசையில் தென்மண்டல வாக்குகளை எப்படி அள்ளுவது என்ற யுக்தியையும் நிச்சயம் வகுப்பார்.. அந்த அளவுக்கு ஆளுமை நிறைந்தவர் என்று பூரிப்பையும், அடர்ந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்..
எனினும், எப்படி பார்த்தாலும், சொந்த செல்வாக்கை முக்குலத்தோர் மத்தியில் நிரூபிக்கும்வரை, ஓபிஎஸ், தினகரனை கூட்டணிக்குள் கொண்டுவரும் பாஜகவின் முயற்சியையும் எடப்பாடி பழனிசாமியால் தடுக்கவே முடியாது என்று திடமாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்…!!!