சுவிஸ் கிராமம் ஒன்றில் வாழும் மக்கள், உடனடியாக பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டு கிராமத்தை காலிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனடியாக வீடுகளை காலிசெய்ய உத்தரவு
சுவிஸ் கிராமமான Brienzஇல் வாழும் மக்களே உடனடியாக ஊரைக் காலிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு பெரும் அபாயம் உருவாகியுள்ளது.
என்ன அபாயம்?
சுவிஸ் கிராமமான Brienz, மலை ஒன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பொதுவாகவே அந்த மலையிலிருந்து அவ்வப்போது பாறைகள் உருண்டு வருவதுண்டு.
ஆனால், தற்போது பிரம்மாண்ட பாறை ஒன்று உடைந்து உருண்டு வரும் அபாயம் உள்ளதைத் தொடர்ந்தே, அக்கிராம மக்கள் உடனடியாக வீடுகளை காலி செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மில்லியன் கியூபிக் மீற்றர் அளவுள்ள பிரம்மாண்ட பாறை உடைந்து விழும் நிலையிலுள்ளதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்குக் காரணம்.
எதனால் இந்த பிரச்சினை?
எப்படிக் கேட்டாலும் இந்தக் கேள்விக்கு ஒரே பதில்தான்… புவி வெப்பமயமாதல்!
அதாவது, புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் சுருங்க, உயரமான மலைகளில் பாறைகளுக்கிடையே வருடக்கணக்காக உறைந்து பாறையோடு பாறையாக மாறிவிட்டிருந்த உறைபனி உருகத் துவங்க, பாறைகளின் நிலைத்தன்மையில் பிரச்சினை ஏற்படுகிறது. பாறைகள் நெகிழத் துவங்குவதால், அவை உடைந்து விழ ஆரம்பிக்கின்றன.
தற்போது சுவிட்சர்லாந்திலுள்ள Brienz கிராமம் அமைந்திருக்கும் பகுதியின் மேல் உள்ள மலைப்பகுதியிலிருந்து பிரம்மாண்ட பாறை ஒன்று உடைந்து விழும் அபாயம் உள்ளதால், வரும் வெள்ளிக்கிழமைக்குள் அக்கிராம மக்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.