இஸ்லாமாபாத்: பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. யார் அவர்? என்ன காரணம்?
இம்ரான்கான் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் அனைத்தையுமே பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருகிறது… மற்றொருபுறம், இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
அதிரடி கைது: இப்படிப்பட்ட சூழலில்தான், வழக்கு ஒன்றிற்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் ஹைகோர்ட்டுக்கு வந்த இம்ரான் கானை, பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.. பிறகு, போலீசார் விசாரணைக்காக அவரை அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
அல்-காதர் பல்கலைக்கழக அறக்கட்டளை, பஹ்ரியா என்ற நகரில் உள்ள அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்புடையது. இந்த நிலத்தை தர உதவியதற்காக மாலிக் ரியாஸ் என்பவருக்கு 190 மில்லியன் பவுண்டுகளை இம்ரான் கான் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்புறுத்தல்: இம்ரான் கானின் கைது நடவடிக்கையானது, பெரும் பரபரப்பை பாகிஸ்தானில் உண்டுபண்ணி வருகிறது.. இந்த கைது குறித்து அவரது கட்சி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளது.. அதில், “இம்ரான்கான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டனர்.. அடையாளம் தெரியாத சிலரால் பெயர் குறிப்பிடாத இடத்திற்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
ஆதரவாளர்கள்: இதையடுத்து, இம்ரான்கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.. பாகிஸ்தான் முழுவதும் ஒருவித பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், நிலைமை இயல்பாக இருப்பதாகவும், விதியை மீறுவோர் மீது நடக்கப்படும் என்றும், இஸ்லாமாபாத் காவல் துறை தரப்பிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இப்படி, இம்ரான் கான் திடீர் கைதால், பாகிஸ்தானில் பதற்றம் உருவாகியிருக்கும் சூழலில், பிரபல நடிகை ஒருவர், ட்வீட் ஒன்றினை பதிவிட்டு, போலீசாரை பதற வைத்துள்ளார்.. பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் என்று கூறி, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
உளவுத்துறை: பாகிஸ்தானை சேர்ந்த அந்த நடிகை பெயர் சேஹர் ஷின்வாரி (Sehar Shinwari).. இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி காவல்துறையின் ஆன்லைன் முகவரி யாருக்காவது தெரியுமா? என்னுடைய நாடான பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பும் இந்திய பிரதமர், இந்திய உளவு அமைப்பின் (RAW) மீது நான் புகாரளிக்க வேண்டும். இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், இந்திய உச்சநீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு, டெல்லி போலீஸ் தரப்பில் அந்த ட்விட்டரிலேயே பதிலளிக்கப்பட்டுள்ளது.. “நாங்கள் பயந்துவிட்டோம். பாகிஸ்தானில் இன்னும் நாங்கள் அதிகாரத்தை பெறவில்லை. ஆனால், நாங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். உங்கள் நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி ட்வீட் செய்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.. இதற்கு இணையவாசிகள் திரண்டு சென்று பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.