தி.மு.க அமைச்சரவையில் மாற்றம் நிகழப்போவதாகவும், புதியவர்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களாக வெளியான செய்திகள் தி.மு.க-வினரை பரபரக்க செய்திருந்தன. இந்தச் சூழலில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன், திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி.கலைவாணன், அரசு கொறடா கோ.வி.செழியன் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏக்களிடையே அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி தொடங்கியது.
அப்போதே, டி.ஆர்.பி. ராஜா தான் புதிய அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என டெல்டா முழுவதும் பரவலாக பேசப்பட்டன. இந்த நிலையில், டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அறிவிக்கப் பட்டிருக்கிறார். நாளை நடைபெறும் விழாவில் முறைப்படி அமைச்சராக பதவியேற்க இருக்கிறார். டி.ஆர்.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் இதனைக் கொண்டாடி வரும் வேளையில், திருவாரூர் மாவட்டத்தில் கடும் விமர்சனங்களும் கிளம்பியிருக்கின்றன.
இது குறித்து தி.மு.க வட்டத்தில் பேசினோம், “தி.மு.க ஆட்சியை பிடித்ததுமே அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜா இடம் பிடிப்பார் என பெரிதாகப் பேசப்பட்டது. டெல்டா மாவட்டத்தில் அமைச்சர் பதவிக்கான ரேஸில் இருந்த பலர் தன்னை அமைச்ச்சராக்க வலியுறுத்தி ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்தனர். குறிப்பாக பூண்டி கலைவாணன் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அமைச்சராகி விட வேண்டும் என தீவிரமாக மெனக்கெட்டார்.
ஒரு பக்கம் டி.ஆர்.பாலு தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவை எப்படியும் அமைச்சராக்கி விட வேண்டும் என ஸ்டாலினுக்கு அருகிலிருந்து முயன்றார். இந்த நெருக்கடியான சூழலைத் தவிர்க்க டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கவில்லை ஸ்டாலின். இது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், `முதலமைச்சரான நானே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். டெல்டாவை நானே கவனித்து கொள்வேன்’ என விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தன் மகனுக்கு அமைச்சர் பதவி தராத அதிருப்தியில் டி.ஆர் பாலு இருந்ததாகவும் பேசப்பட்டது. டி.ஆர். பாலுவையும், ராஜாவையும் சமாதானப்படுத்த பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டன. உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்கும் சமயத்தில் ராஜா அமைச்சராவார் எனவும் சொல்லப்பட்டது அப்போதும் நடக்கவில்லை.
ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் டி.ஆர்.பாலு தொடர்ந்து, ராஜாவை அமைச்சராக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக அமைச்சரவையில் தற்போது நிலவும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
மகன் அமைச்சராக அறிவிக்கப்பட்ட பின்னர், எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதற்காக டெல்டாவில் அமைச்சர் ரேஸில் இருக்கும் சீனியர்கள் சிலரை டி.ஆர்.பாலு சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. பூண்டி கலைவாணன் தரப்புக்கும், டி.ஆர்.பி.ராஜா தரப்புக்கும் ஆரம்பத்திலிருந்தே புகைச்சல்கள் தொடர்கின்றன. இந்த சூழலில் ராஜா அமைச்சராவதை தடுத்து தான் அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற கலைவாணனின் முயற்சிகள் பலிக்கவில்லை.
மூன்று முறை தொடர்ந்து, எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா, சட்டசபையில் சீனியர் என்பதால் அவருக்கு தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரின் தரப்பினர் பேசி வந்தனர். மறைந்த முதல்வர் கருணாநிதி இரண்டு முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, தொகுதியை விட்டுக் கொடுத்தவர் கலைவாணன். அவரை வேறு தொகுதி போட்டியிட தலைமை வலியுறுத்தியும், அதனை வேண்டாம் எனக் கூறி, `நான் தலைவர் கருணாநிதிக்கு வேலை செய்கிறேன்’ என அனைத்தையும் கவனித்து கொண்டார். அந்த வகையில் கலைவாணனும், சீனியர்தான் என அவர் தரப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வந்தனர்.
சமீபத்தில் உதயநிதி திருவாரூர் வந்த போது, அவரை குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வலம் வந்து, தன் பலத்தை நிரூபித்தார் பூண்டி கலைவாணன். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியோரிடம் நேரடி தொடர்பில் இருக்கும் டி.ஆர்.பி.ராஜா தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இருக்கிறார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் இரு தரப்பினருக்கும் இடையே விமர்சனம் தொடங்கியிருக்கின்றன. `உழைப்பவரை தேடிக் கண்டுபிடித்து கட்சி நடத்தினால் பலன் உண்டு. கிடைத்தவரை கொண்டு நடத்தினால் பலன் இல்லை’ என அண்ணா கூறியதையும், `உழைப்புக்கு கிடைக்கும் ஊதியம், மரியாதை அது கருணாநிதியுடன் முடிந்து விட்டது. தற்போது தலைமை சூழ்நிலை கைதியாக இருக்கிறது’ என்றும் லோக்கல் கட்சிக்குள்ளேயே டி,ஆர்.பி.ராஜாவுக்கு எதிரான குரல்கள் கிளம்பியிருக்கின்றன.
டி.ஆர்.பி.ராஜா மீது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், தன் தனித்துவமிக்க செயல்பாடுகளால் பல தரப்பையும் கவர்ந்திருப்பவர். சீனியர் அமைச்சரான துரைமுருகன் ஆய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். அப்போது விவசாயம் தொடங்கி தொழில் வரை எந்த துறையாக இருந்தாலும் அது குறித்து துல்லியமாக பேசும் டி.ஆர்.பி.ராஜாவின் திறமை என்னை மெய்சிலிர்க்க வைப்பதாக சீனியர்கள் முன் பாராட்டினார்.
பல்வேறு எதிர்ப்புகளைச் சமாளித்து முதல்முறை எம்.எல்.ஏ-வாக வெற்றிப் பெற்ற பிறகு மன்னார்குடி தேரடித்தெருவில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் டி.ஆர்.பி.ராஜா அரசியலில் இன்னும் பல உயரங்களை அடைவார் என ஸ்டாலின் பாராட்டினார். டி.ஆர்.பாலு மகன் என்பதற்காக ஸ்டாலின் அதனைச் சொல்ல வில்லை. எடுத்த செயலை கச்சிதமாக முடிக்க கூடியவர் டி.ஆர்.பி.ராஜா என்பதை அறிந்ததாலேயே அப்படிச் சொன்னார்.
சீனியர்கள் பலர் இருக்கையில் டி.ஆர்.பி.ராஜா-வுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது டி.ஆர்.பாலுவுக்கு ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. தற்போதைய தி.மு.க ஆட்சியில் புதிய அமைச்சராகும் டி.ஆர்.பி ராஜா மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அமைச்சர் பதவிக்கு தகுதியானவராக அவர் இருப்பார்” என்றனர்.