ஷாங்காய் : தங்கள் நாட்டு எம்.பி.,க்கு எதிராக செயல்படுவதாக, சீனத் தூதரை வெளியேற கனடா உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக, கனடா தூதரை வெளியேற்றி, சீனா உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவுக்கும், வட அமெரிக்க நாடான கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. கடந்த, 2018ல், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் உயரதிகாரி, கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டு கனடா நாட்டவரை, சீனா கைது செய்தது. பின் இந்த மூவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இரு நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், கனடா நாட்டு எம்.பி.,யான மைக்கேல் சாங்க், சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்படுவதைத் கண்டித்து பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து மைக்கேல் சாங்க் மற்றும் ஹாங்காங்கில் உள்ள அவருடைய உறவினர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, டொரன்டோவில் உள்ள சீன தூதரக துணைத் தூதர் ஜாவோ வீயை, நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஷாங்காயில் உள்ள கனடா துணைத் தூதர் ஜெனிபர் லின் லாலோன்டேவை, 13ம் தேதிக்குள் வெளியேறுமாறு சீனா நேற்று உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement