அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் என பல்வேறு தரப்பின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இதற்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவுகளின் படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.
அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேனி மக்களவை தொகுதி எம்பி ரவீந்திரநாத்திற்கு எதிராக, மக்களவை சபாநாயகர் இடம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி மனு அளித்துள்ளார்.
அதிமுக எம்பி என ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சிவி சண்முகம் மனு அளித்துள்ளார்.
தேனி எம்பி ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், அவரை அதிமுக எம்பி என்று அங்கீகரிக்க கூடாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அதிமுக எம்எல்ஏ இல்லை என்பதை சபாநாயகர் அப்பாவுவே உறுதியாக தெரிவித்த நிலையில், தற்போது அவரின் மகனும் அதிமுக எம்பி இல்லை என்பதை உறுதிப்படுத்த அதிமுக தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.