Karnataka Election 2023: சிலிண்டருக்கு ஆரத்தி காட்டி வழிபாடு… வாக்களிக்கும் முன்பு காங்கிரஸ் கட்சியினர் குசும்பு!

கர்நாடக மாநிலத்தின் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

கர்நாடகாவில்
காங்கிரஸ்
மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரச்சாரத்தின் போதே இரு கட்சி பிரமுகர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வாக்கு சேகரித்து வந்தனர். இந்நிலையில் இன்று ஒரு பக்கம் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை கேலி செய்யும் வகையில் சில சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அதாவது பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை உச்சத்தை எட்டியதை நினைவுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் வாக்களிக்கும் முன்பாக சிலிண்டர்களை தெருக்களில் வைத்து மாலையிட்டு ஆரத்தி காட்டி வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் சிலிண்டர்களை கடவுளாக பாவித்தும் கும்பிட்டு வழிபட்டவாறு நக்கல் செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இனிடையே கர்நாடகாவில் பாஜக 135 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பாஜகவைதான் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு கர்நாடக சட்டசபைக்கு மே 10 ஆம் தேதியான இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதன்படி இன்று தேர்தல் நடைபெறறு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் 5 கோடியே 21 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார், துணை ராணுவப் படையினர் என ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பும் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.