பெங்களூரு: பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்த தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி மீதான ஈர்ப்பு கர்நாடகாவில் மட்டுமல்ல நாடு முழுவதுமே இருக்கிறது. அவர் மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர். தாங்கள் கூறுவதை பிரதமர் கேட்கிறார்; அதற்கு பதில் அளிக்கிறார் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் காலத்தில் மட்டும் பக்திமானாக தன்னை காட்டிக்கொள்ளும். இது காங்கிரஸ் மேற்கொள்ளும் தந்திரம். கர்நாடகா கடவுள் அனுமானின் மண். அவர் இங்குதான் பிறந்தார். ஆனால், பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் எந்த அளவு மக்களை முட்டாளாக்கக்கூடிய கட்சி என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. ஆனால், பாஜக எப்போதுமே ஆஞ்சநேயர் மீது பக்தி கொண்டுள்ளது. எப்போதுமே நாங்கள் அனுமன் சாலிசாவை பாடுபவர்கள்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் விமர்சிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொடர்ந்து பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருந்தது. நான் ஒப்பீடு போட்டியை விரும்பவில்லை. ஆனால், 2014ல் இருந்து நரேந்திர மோடி அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடகாவிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பசவராஜ் பொம்மை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெட்ரோல் மீதான கலால் வரியை கர்நாடக அரசு இருமுறை குறைத்துள்ளது. பணவீக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் மக்களோடு இருக்கிறோம். பணவீக்கம் குறைந்து வருகிறது. ஆனால், இது பற்றி கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது பணவீக்கம் எப்படி இருந்தது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும்.” இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.