என்னுடைய மனைவி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரை இரவும், பகலும் தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஒரு நிறுவனத்தின் மூலம் நர்ஸ் தேவி என்பவரை பணிக்கு நியமித்திருந்தேன். கடந்த 6-ம் தேதி வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததால் சந்தேகத்தின் பேரில், நகைகளை சரிபார்த்தேன். அப்போது சுமார் 182 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அன்றைய தினம் என் மனைவியை கவனித்துக் கொள்ள நர்ஸ் தேவி என்பவர் மட்டுமே வீட்டிலிருந்தார்.
அதனால் நகைகள், பணம் திருட்டு குறித்து தேவியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். மேலும் யாரிடமும் தகவல் சொல்லாமல் வீட்டை விட்டு நர்ஸ் தேவி தப்பி ஓடிவிட்டார். அதனால் நர்ஸ் தேவி மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. எனவே விசாரணை நடத்தி நகைகள், பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாலா வழக்கு பதிவுசெய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இந்தப் புகாரையடுத்து உதவி கமிஷனர் கிறிஸ்டி ஜெயசீலன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிமாலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், நர்ஸ் தேவியைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்தான் நகைகள், பணத்தை திருடியது தெரியவந்தது.
இது குறித்து குமரன் நகர் போலீஸார், “ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மதுரகவியின் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டவர். அதனால் மதுரகவி, தன்னுடைய மனைவியைக் கவனித்துக் கொள்ள கள்ளகுறிச்சி மாவட்டம், எல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த நர்ஸ் தேவியை (32) பணியமர்த்தியிருக்கிறார் . பணிக்குச் சேர்ந்த தேவி, மதுரகவியின் மனைவியை நன்றாக கவனித்திருக்கிறார். மேலும் வீட்டில் உள்ள சூழலையும் அவர் தெரிந்திருக்கிறார். அப்போதுதான் மதுரகவியின் வீட்டின் பீரோவில் கணக்கில்லாமல் நகைகள் இருப்பதை தெரிந்த நர்ஸ் தேவிக்கு மனம் மாறியது.
நகைகளைத் திருட முடிவு செய்த தேவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகைகளைத் திருடியிருக்கிறார். அதை தன்னுடைய ஆண் நண்பர் ஜெகநாதனிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இருவரையும் கைது செய்து 207 சவரன் தங்க நகைகள், 34,000 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். விசாரணைக்குப்பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவிருக்கிறோம். மதுரகவியின் மருமகள், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
மேலும் கைதுசெய்யப்பட்ட நர்ஸ் தேவி, மதுரகவியிடம் வேலைக்குச் சேர்ந்து 5 நாள்கள்தான் ஆகியிருக்கிறது. திருடிய நகைகளை தன்னுடைய ஆண் நண்பர் ஜெகநாதனிடம் நர்ஸ் தேவி கொடுத்து வைத்திருக்கிறார். ஜெகநாதன், தனியார் உணவு நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்திருக்கிறார். இந்த வழக்கில் புகார் கொடுத்த அடுத்த சில மணி நேரத்திலேயே நர்ஸ் தேவி மற்றும் அவரின் ஆண் நண்பரைப் பிடித்துவிட்டோம். அதற்கு காரணம் நர்ஸ் தேவி குறித்த முழு விவரங்கள் மதுரகவியிடம் இருந்தது. அதனால் எளிதாக இந்த வழக்கில் துப்பு துலங்க முடிந்தது” என்றனர்.