கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தினர். மிகுந்த முக்கியத்துவம் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக தொகுதிகளில் வெற்றி பெரும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் உறுதியாகி உள்ளது.
ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பின் படி, பாஜக 36 சதவிகித வாக்குகளுடன் 85 முதல் 100 இடங்களில் வெற்றியடையும் எனவும், காங்கிரஸ் கட்சி 40 சதவிகித வாக்குகளுடன் 94 முதல் 108 இடங்களை வெல்லும் எனவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 17 சதவிகித வாக்குகளுடன் 24 முதல் 32 இடங்களை கைப்பற்றும் எனவும், அதேபோல் மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்கள் 7 சதவிகித வாக்குகளுடன் 2 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த முறை போலவே இம்முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை வெல்லும் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பது குறிப்பிடதக்கது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. அதேபோல் தான் இம்முறையும் தொங்கு சட்டசபை அமையும் என கருத்துகணிப்புகள் கூறியுள்ளன.
கடந்த முறை முதல்வர் குமாரசாமியின் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சிகாலமான ஐந்து ஆண்டுகாலம் முடிவதற்குள், இந்த கூட்டணியில் இருந்த எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்தது. அதன்காரணமாக தான் 150 தொகுதிகளில் வெல்ல வேண்டும், இல்லாவிட்டால் பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி விடுவார்கள் என இலக்கு நிர்ணயித்து காங்கிரஸ் வேலை செய்தது. இருப்பினும் தொங்கு சட்டசபை அமையும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சி கலக்கத்தில் உள்ளது.
கடந்த முறை போலவே, இம்முறையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கிங் மேக்கராக உருவெடுப்பார் என கூறப்படுகிறது. சுமார் 30 எம்எல்ஏக்களை வைத்திருந்த குமாரசாமி கடந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் முதல்வரானார். அதேபோல் தொங்கு சட்டசபை அமைந்தால், மீண்டும் குமாரசாமி கிங் மேக்கராக இருப்பார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.