`என்னுடைய பலம் என்னவென்பது எனக்கு தெரியும். நான் வேறெதையும் வித்தியாசமாக செய்யவில்லை.’ பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிக்கொடுத்துவிட்டு ‘ஆட்டநாயகன்’ விருதையும் வென்றுவிட்டு சூர்யகுமார் யாதவ் இப்படி சாந்தமாக பேசியிருந்தார்.
நவீன கிரிக்கெட் சூழலில் ஒரு வீரர் தன்னுடையம் பலம், பலவீனம் என எதையும் மறைக்கவே முடியாது. எல்லாவற்றையும் கண்டுபிடிக்க இங்கே கணினி மென்பொறிகளும் அவற்றை முறையாக பயன்படுத்தி விஷயத்தை கறக்க தரவு மேலாண்மையினரும் இங்கே குவிந்திருக்கின்றனர். இப்படி ஒரு சூழலில் தன்னுடைய அதே பாணியில் தன்னுடைய பலம் என்னவோ அதை மட்டும்தான் நம்பி ஆடுவேம் என்று சொல்வதற்கே பெரும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கையை பற்றி சூர்யகுமார் யாதவிற்கு பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை. அவர் இந்திய அணிக்கு அறிமுகமானதே அவரின் தன்னம்பிக்கையின் வீரியத்திற்கான வெளிப்பாடுதான். உள்ளூர் போட்டிகளில் ஐ.பி.எல் இல் என கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் வெளுத்தெடுத்தும் இந்திய அணிக்கான வாய்ப்பு மட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை.
‘2019 ஐ.பி.எல் சீசனில் நன்றாக ஆடினேன். 2020 ஐ.பி.எல் சீசனிலும் நன்றாக ஆடினேன். உள்ளுர் போட்டிகளிலும் நன்றாக ஆடினேன். இந்திய அணியிலிருந்து அழைப்பு வருமென நம்பினேன். என்னுடைய நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வரும் என நம்பினேன். ஆனால், அது நடக்கவில்லை. அந்த ஏமாற்றத்தை தவிர்க்க என்னவெல்லாமோ செய்தேன். மனைவியுடன் கடற்கரைக்கு சென்றேன். மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு சென்றேன்.’
இப்படியான ஏமாற்றங்களையும் அதிருப்திகளையும் கடந்துதான் சூர்யா இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்காத சமயங்களில் சூர்யாவே பல முறை இப்படி புலம்பியிருக்கிறார். சூர்யாவுக்காக ரசிகர்களுமே இப்படி புலம்பியிருக்கின்றனர். ஆனால், எந்த ஒரு தருணத்தில் அவர் அந்த தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவே இல்லை. இதோ இந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசியதை போன்றுதான். தனக்கு என்ன தெரியுமோ…தன்னுடையோ பலம் என்னவோ அதை மட்டுமே நம்பினார். ஆம், கிரிக்கெட் ஆட தெரியும். பேட்டை பிடித்து பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கத் தெரியும். அதை மட்டுமே அயராமல் செய்து கொண்டே இருந்தார். இந்திய அணிக்கான வாய்ப்பு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் இவரை தேடி வந்தது.
இந்திய அணிக்காகவும் மிக முக்கிய பங்களிப்புகளை வழங்கி வந்த சூர்யாவுக்கு சமீபத்திய நாட்கள் கொஞ்சம் சறுக்கல் மிக்கதாகவே நகர்ந்திருந்தது. இந்த ஐ.பி.எல் சீசனுக்குள் நுழைவதற்கு முன்பாக சூர்யா ஆடிய கடைசி மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருந்தார். வழக்கமாக வானை பிளக்கும் வகையில் ஷாட் ஆடும் சூர்யாவின் பேட்கள் தலைநிமிர மறுத்திருந்தன.
நாலாபுறமும் சிக்சர்களாக விளாசியவர், நாலாபுறமிருந்தும் விமர்சன கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல். நடப்பு சீசனின் தொடக்க போட்டிகளிலுமே சூர்யாவால் தான் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கவே முடியவில்லை.
ஆனால், சீசன் செல்ல செல்ல தன் தன்னம்பிக்கையின் துணை கொண்டு சூர்யா மீண்டு வர தொடங்கினார்.
குறிப்பாக, மும்பை அணியின் உச்சபட்ச சேஸிங்கின் போதெல்லாம் சூர்யா ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்தார்.
நடப்பு சீசனில் மும்பை அணி இதுவரை மூன்று முறை 200 அல்லது 200 க்கும் அதிகமான ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறது. அந்த மூன்று முறையுமே சூர்யாவின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்திருக்கிறது.
ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி 213 ரன்கள் டார்கெட்டை 19.3 ஓவர்களிலேயே எட்டியிருந்தது. அந்தப் போட்டியில் சூர்யா 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 189. பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு 215 ரன்கள் டார்கெட். அந்த டார்கெட்டை மும்பை அணி 18.5 ஓவர்களிலேயே எடுத்து முடித்திருந்தது. அதில் சூர்யா மட்டும் 31 பந்துகளில் 66 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 212.9. பெங்களூருவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு 200 ரன்கள் டார்கெட். அந்த 200 ரன்களை மும்பை அணி 16.3 ஓவர்களிலேயே எடுத்திருந்தது. சூர்யா 35 பந்துகளில் 83 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 237.14.
அணி ஒரு இமாலய இலக்கை துரத்துகிறதெனில் முதல் ஆளாக முன் வந்து நின்று அந்த இலக்கை துச்சமென தோன்ற வைக்கும் வகையில் ஒரு பிரமாண்டமான இன்னிங்ஸை எப்போதுமே ஆடிக்கொடுத்திருக்கிறார்.
அவர் எந்த சமயத்தில் இந்த இன்னிங்ஸ்களை ஆடுகிறார் என்பதுமே ரொம்பவே முக்கியம். பெங்களூருவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 4.4 வது க்ரீஸிற்குள் வந்தவர் 15.4 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் பவர்ப்ளே முடிந்தவுடன் வந்தவர் 15.1 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8.2 வது ஓவரில் க்ரீஸிற்குள் வந்தவர் 15.4 வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். நம்பர் 3 மற்றும் நம்பர் 4 இல் களமிறங்குவதால் பெரும்பாலும் இந்த மிடில் ஓவர்களில்தான் சூர்யா ஆட வேண்டியிருக்கிறது. மிடில் ஓவர்கள் கொஞ்சம் பக்குவமாக அனுகப்பட வேண்டியவை. அதுவும் 200+ சேஸிங்கின் போதென்றால் சொல்லவே வேண்டாம்.
பவர்ப்ளேயில் கிடைக்கும் மொமண்டத்தை அப்படியே இறுதி வரை தக்கவைத்து நீட்டித்து செல்ல வேண்டும். அத்தோடு விக்கெட்டுகளும் விழாதபடிக்கு கொஞ்சம் நின்றும் ஆட வேண்டும். இந்த இரண்டு விதத்திலுமே சூர்யா கெட்டிக்காரராக இருக்கிறார். வதேரா மாதிரியான இளம் வீரருடன் பக்குவமாக கூட்டணியும் அமைக்கிறார்.
கூடவே தன்னுடைய அதிரடியையும் வெளிக்காட்ட தவறுவதில்லை. அதற்காகத்தான் சூர்யகுமார் யாதவிற்கு அந்த ‘ஆட்ட நாயகன்’ விருதும் கொடுக்கப்பட்டது.