தமிழ்நாடு முழுவதும் தோண்டப்படும் சாலைகளை உடனடியாக சரிசெய்யுங்கள் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், சென்னையில் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளதை தான் காண்பதாகவும், இதனால் பொதுமக்கள் சிரமமடைவதாகவும் தெரிவித்தார்.
தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரை பெற்று தரும் என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நிர்வாக ரீதியான தாமதங்களை தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும் என்றும், சென்னை புறநகர் பகுதிகளில் செயல்படுத்தக் கூடிய திட்ட பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பணி முன்னேற்றத்தில் பிரச்னை இருந்தால், தலைமைச் செயலாளர் அல்லது அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
newstm.in