மாநில கல்வி கொள்கை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஜவஹர் நேசன் விலகல்! உதயசந்திரன் ஐஏஎஸ் மீது புகார்

சென்னை: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பேராசிரியர் ஜவஹர் நேசன், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வரின் தனிச் செயலாளருமான உதயசந்திரன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வியின் நலனையும் மாநிலத்து இளைஞர்களின் எதிர்கால நலன்களையும் மனதில் கொண்டு மாநிலத்தின் சரித்திர மரபுகளையும் தற்போதைய சூழலையும் கருத்தில் கொண்டு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை தமிழக அரசு உருவாக்கியது. மிகச் சிறப்பான இந்த சரித்திர முன்முயற்சி எடுத்தமைக்கு முதல்வருக்கும் அவருடைய அரசுக்கும் நன்றியை உரிதாக்குகிறேன்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ மறுதலித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவு, மாநிலத்திற்கென்று தனித்துவமான கல்விக் கொள்கையின் அவசியம் எனும் முதல்வரின் லட்சிய நோக்கை உணர்த்தியது. தமிழக மக்களிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பரந்துபட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த உயர்நிலை குழுவில் ஒரு உறுப்பினராக முக்கிய பங்கை ஆற்றுவதற்கு பொறுப்பளித்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட முறைகளையும் தரங்களையும் கடைப்பிடிக்காமல் தனித்துவமிக்க கொள்கையை உருவாக்க முடியாது. இது பின்வரும் விஷயங்கள் குறித்து தொடர்ச்சியான ஆய்வுகளை மீளாய்வுகளை செய்வதாகும்: சமூக நிலைமைகள் மற்றும் கல்வி செயல்பாடுகள், சமூகத்தின் விருப்பச் சார்புகள் குறித்து கண்டறிதல், கொள்கை மாற்றுக்கள், ஒவ்வொரு கொள்கை மாற்றும் நிலவுவதறகான காரணங்களை மதிப்பிடுதல், ஒவ்வொரு கொள்கை மாற்றையும் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பொருளாதார ரீதியான சமூக ரீதியான வரையறைகளை ஆய்வு செய்து நமக்கு உகந்த சரியான கொள்கை மாற்றைத் தேர்ந்தெடுத்தல், பொதுக் கொள்கை என்பது அனைவருக்குமானது, அது சமூகம் முழுமைக்கும் செயல்படுத்தப்படும்.

எனவே இந்த கொள்கை உருவாக்கம் சமூகத்தில் அதன் பயனாளிகளின் பல்வேறுபட்ட நலன்களையும் தேவைகளையும் நியாயமான முறையில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்காக பயனாளிகளுடன் விவாதிக்க பேரம் பேச வேண்டி இருக்கும். இதை மனதில் வைத்தே குழு தன் செயல்பாட்டை தொடங்கிய முதல் நாளிலிருந்தே விரும்பத்தக்க முடிவை அடைவதற்காக கொள்கை உருவாக்கத்திற்கும் குழுவின் செயல்பாட்டிற்கும் என்னால் இயன்ற வரை பங்களித்து வந்துள்ளேன். செயலகத்தையும் அதற்கான வளங்களையும் ஏற்படுத்துதல், அடிப்படைக் கருப்பொருளை நிர்மாணித்து அதற்கான வழிகாட்டல்களை உருவாக்குதல், ஏன் தமிழ்நாட்டிற்கென தனிக்கொள்கை அவசியம் என கருத்துரு உருவாக்குதல்.

problem statement என்று அழைக்கப்படும் சிக்ல்கள் குறித்த கருத்துரு உருவாக்குதல், சர்வதேச அளவில் 113 வல்லுநர்கள் கொண்ட 13 துணைக் குழுக்களை உருவாக்கி விவாதித்து தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்யும் முறைகளை உருவாக்கியது. இதற்காக 50 பள்ளிகள், 15 கல்லூரிகள், 5 பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 நிறுவனங்களில் மாதிரி ஆய்வுகளை முடித்தது ஆகியன அடங்கும்.

இறுதியாக நான் மேற்கொண்ட தேவையான ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் 13 துணைக் குழுக்கள் செய்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் பெற்ற தரவுகளைக் கொண்டு Initial policy inputs (232 பக்கங்கள்) என்ற தலைப்பில் இடைக்கால அறிக்கையை எழுதி உயர்நிலை குழுவிற்கு சமர்ப்பித்திருக்கிறேன். இது நீண்டகாலத் திட்டத்திற்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் திசைவழி காட்டக் கூடியது. நம் மாநிலத்தில் நிலவும் தனித்த சூழல்களையும் சிக்கல்களையும் கணக்கில் கொண்டு இந்த அறிக்கையை எழுதியிருப்பதால் இது நமக்கென தனித்துவமான இறுதி கொள்கையை வகுக்கப் பெரும் பங்களிப்பை வழங்கும்.

அடிப்படை வசதிகளும் கட்டமைப்பும் இல்லாத நிலை தற்போது வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இந்நிலை ஏற்படுத்திய கடின சூழ்நிலைக்கு மத்தியில் மேலே குறிப்பிட்ட வேலைகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறேன். ஆயினும் ரகசியமாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும் சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகார எல்லை மீறல்களாலும் முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் எனது பணியைத் தொடர்ந்து செய்வதற்கும் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கும் மென்மேலும் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

அதன் விளைவாக தேசியக் கொள்கை 2020 இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிரது. எனவே இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக் கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கிற தேசியக் கொள்கை 2020இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும். இந்த நிலை நீடித்தால், அது தமிழக மக்களின் விருப்புணர்வுகளுக்கும், தமிழ்ச் சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கும் பெரும்பாலும் எதிராக கல்விக் கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுகிறேன்.

Tamilnadu Education Policy high level committee member resigned

அரசு ஆணை எண் 98 குழுவிற்கு பணித்துள்ள ஆய்வு வரையறைகளை நீர்த்து போகச் செய்யும் நோக்கத்துடன் உயர்நிலைக் குழு செயல்பட்ட போதும். நான் குழுவின் கொள்கை உருவாக்கும் நடைமுறையையும் தேவையான இலக்குகளை அடையும் திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் எனது பங்களிப்பைத் தொடர்ந்தபடியே இருந்தேன். எனினும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன் கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறி என்னை அச்சுறுத்தி அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார். இத்தகைய அதிகாரியின் வரம்பு மீறிய செயல்களையும் பாதுகாப்பற்ற நிலையையும் கடந்த சில மாதங்களில் குழுத்தலைவரிடம் பலமுறை முறையிட்டும் கூட அவை அனைத்தையும் எதிர்வினை துளியேனும் ஆற்றாமல் புறந்தள்ளும் போக்கைக் கடைப்பிடித்தார்.

தலைவர் இதுவரை இந்த நிகழ்வு குறித்து என்னுடையக் கருத்தைக் கேட்கவில்லை. இதில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அவர் தரவில்லை. மொத்தமாக அதிகார வர்க்கத்தின் தலையீடுகளிலிருந்தும், குழுவிற்குள் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் குழுவின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையைப் பாதுகாக்க குழுவின் தலைமை தவறிவிட்டது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. தீர்வை வேண்டி குழுவின் தலைவரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கேட்கவே படாமல் போனதால், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடமும் கடிதம் சமர்ப்பித்தேன்.

எனது கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. சூழலை சரி செய்ய இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்று களைப்பற்று உண்மையும் ஜனநாயகமும் அற்ற குழுவின் சூழலும் அதிகார வர்க்கத்தின் தலையீடுகளும் அச்சுறுத்தலும் என் செயல்களை முடக்க, பெரும்பாலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இதன் மேலும் குழுவில் நீடிப்பது பொருளற்றது என உணர்கிறேன். எனவே கனத்த இதயத்துடன் இந்த உயர்மட்டக் குழுவில் இருந்து நான் விலகுகிறேன் என்பதை அறிவிக்கிறேன். நம் மக்களுக்கும் நம் பெருமைமிகு அரசுக்கும் உலகளாவிய அனுபவத்தால் பெற்ற என் அறிவையும் திறமையையும் கொண்டு பணியாற்றுகிற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பிலிருந்து விலகுவதைக் காட்டிலும் எனக்கு மிகுந்த துயர் தருவது எதுவும் இல்லை. இருப்பினும் இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கு எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன் என உறுதியளிக்கிறேன். மேலும் நன்கு மெய்ப்பிக்கப்பட்ட மனிதநேய லட்சியங்களின் அறிவியல் ரீதியான அறக் கொள்கைகளின் சமூக அறக் கொள்கைகளின் தமிழ்நாட்டு மக்களின் விருப்புணர்வுகளின் அடிப்படைகளில் ஒரு நேரிய சமத்துவமான மதசார்பற்ற கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான எனது போராட்டம் என்றும் தொடரும். இவ்வாறு ஜவஹர் நேசன் தெரிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.