கடலூர்: நலத்திட்ட விழாவுக்கு தாமதமாக வந்த அமைச்சர்கள்; 4 மணி நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்

கடலூரில் மாவட்ட அனைத்துத் துறைகள் சார்பில் `ஈடில்லா ஆட்சி… ஈராண்டே சாட்சி’ என்ற தமிழ்நாடு அரசின் இரண்டாம் ஆண்டு திட்டப் பணிகள் தொடர்பாக சாதனை மலர் வெளியீடு மற்றும் 807 பயனாளிகளுக்கு ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் கலந்துகொண்ட இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அத்தனை பயனாளிகளையும் 8:30 மணிக்கே அவர்களின் இருக்கைகளில் அமரவைத்து நகராமல் பார்த்துக்கொண்டனர் தி.மு.க-வினர். அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டதால் பலர் காலை உணவின்றி சிரமப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகள்

 ”அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் இதோ வந்துவிடுவார்கள்.. விழா ஆரம்பித்துவிடும்…” என்று கூறி அவர்களைக் கட்டுப்படுத்தும் வேலையிலேயே தி.மு.க-வினர் தீவிரம் காட்டினர். இயற்கை உபாதைகள் கழிக்கக்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும் இதே நிலைதான். ”சரி, வந்தது வந்துவிட்டோம். இரண்டு மணி நேரம்தானே… வாங்கிட்டு பாத்ரூம் போய் சாப்பிட்டுக்கலாம்” என்று நினைத்துக்கொண்டிருந்த பயனாளிகள் 10:30 மணி வரை காத்திருந்து நொந்துபோனார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர், ஆட்சியர் என அனைவரும் 12:45 மணிக்குத்தான் விழா அரங்குக்குள் நுழைந்தார்கள். நான்கு மணி நேரம் பசியாலும், இயற்கை உபாதைகள் கழிக்காமலும் காத்திருந்த பயனாளர்கள், “பாத்ரூம்கூட போகவிடாமல் எங்களை அடைச்சுவெச்சுட்டீங்க…” என்று கொதிக்க, பாய்ந்து சென்று அவர்களை ஆஃப் செய்தனர் தி.மு.க-வினர்.

”11 மணிக்கு வந்தால் போதும் என்று வி.ஐ.பி-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை மட்டும் அலர்ட் செய்திருந்த அதிகாரிகள், பயனாளிகளை மட்டும் 8:30 மணிக்கே அடைத்து வைத்துவிட்டார்கள். அதற்காக அந்தந்தப் பகுதி கட்சிக்காரர்கள் அதிகாலை 5 மணி முதலே அவர்களை வேனில் ஏற்றிவிட்டார்கள். பசியாலும், இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க முடியாமல் அவர்கள் அவதிப்பட்டதைப் பார்க்க பாவமாக இருக்கிறது” என்று நம்மிடம் வேதனை தெரிவித்தார் பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவர்.

பயனாளிகளோ, “இல்லாத காரணத்துக்காக, உதவிக்காகத்தான் வந்திருக்கோம். அதுக்காக, சாப்பாடு இல்லாம, பாத்ரூம் போக முடியாம நாலு மணி நேரத்துக்கும் மேல எங்களை உட்காரவெச்சுருக்காங்க. உதவிக்காகத்தானே வந்திருக்காங்கன்னு அரசாங்கமே எங்களை இளக்காரமா நினைக்கலாமா… ஏதோ தண்ணீர் டேங்க்கையும், ஹாஸ்பிடல்ல ஒரு கட்டடத்தையும் திறந்துவெச்சுட்டு வந்ததால லேட் ஆகிடுச்சுன்னு அதிகாரிங்க சொல்றாங்க. ஆயிரம் பேரு இங்க பசியோட காத்துக்கிட்டிருக்கோம். ஆனா, வெறும் அஞ்சு பேர் கலந்துக்கற அந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் போயிட்டு அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் சாவகாசமா வர்றாங்க. இங்க வந்துட்டு அதுக்கப்புறம் அந்தத் திறப்பு விழாக்களுக்கு போயிருந்தா என்ன?” என்றனர் வேதனையுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.