தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் பெய்து வரும் மழையால் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட எள் பயிர் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவையாறு வட்டாரத்திலுள்ள, சிறுபுலீயூர், புனல்வாசல், தில்லைஸ்தானம், பெரும்புலியூர், அந்தணர்குறிச்சி, காருகுடி, கண்டியூர், விளாங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் எள் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த மாதம் விதை தெளித்துள்ள நிலையில் தற்போது அப்பயிர்கள் பூ பூக்கும் நிலையில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால், எள்ளுப் பயிரின் வேர்கள் அழுகிவிட்டன, இலைகளும் காய்ந்து விட்டன.
மேலும், அதிலுள்ள பூக்கள் உதிர்ந்துள்ளதால் எள் போதுமான விளைச்சல் கிடைக்குமா என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மேலும், சில விவசாயிகள் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட எள் பயிர்கள் முளைக்காத நிலையில், அதில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டுள்ளனர்
இதனால், ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும். எனவே, தமிழக அரசு வேளாண் துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், எனவும், இந்த நிதியுதவி கிடைத்தால், அடுத்து குறுவை சாகுபடியைத் தொடங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.