சென்னை : பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து விடுவித்து, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி இன்று (மே 11) காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்ற 2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடக்கிறது. இதுவரை இலாகாக்கள் மட்டுமே மாற்றப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து முதல் நபராக தூக்கப்பட்டுள்ளார். டிஆர்பி ராஜாவுக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது டி.ஆர்.பி ராஜா அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளதால் டெல்டாவுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
ராஜாவுக்கு என்ன இலாகா? : டிஆர்பி ராஜா நாளை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. புதிய அமைச்சர் பதவியேற்புக்கு பின்னர் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை அமைச்சரவையில் மிக முக்கிய மாற்றங்கள் நடக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீடு ஊக்குவிப்பு துறை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்துவரும் டிஆர்பி ராஜா தொழில் துறை அமைச்சராக திறம்படப் பணியாற்றுவார் என முதல்வர் நம்புகிறாராம்.
தங்கம் தென்னரசு துறை : தொழில்துறை டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்டால் தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சராக மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி அரசு முறைப் பயணமாக செல்லவுள்ள நிலையில் அதற்கான முழு ஏற்பாட்டையும் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவே செய்துள்ளார்.
மேலும், விரைவில் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு மாநாடும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென தங்கம் தென்னரசுவிடம் இருக்கும் தொழில் துறையை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுப்பது சரியாக இருக்காது என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த இலாகா மாற்றம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பிடிஆர் விவகாரம் : அதுமட்டுமல்லாமல், தொழில்துறைக்கு பதிலாக நிதித்துறையை தங்கம் தென்னரசுவுக்கு வழங்குவதிலும் சிக்கல் உள்ளது. நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், அதற்காகத்தான் பிடிஆருக்கு எதிராக முதல்வர் இந்த முடிவை எடுத்தாரா என்ற விமர்சனங்கள் எழும். இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகிவிடும் என்பதால், இப்போதைக்கு பிடிஆரின் கைகளில் இருந்து நிதித்துறை பறிக்கப்படாது என்கிறார்கள்.
ஒருவேளை டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்படவில்லை என்றால் அதற்கு பதிலாக தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி மாற்றப்பட்டால் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜிடம் பால்வளத்துறை ஒப்படைக்கப்படும் என்றும் ஒரு தகவல் பரவுகிறது.
அப்படியே மாற்றி : மற்ற அமைச்சர்களின் இலாகா மாற்றங்கள் எதுவும் இதுவரை உறுதியாகவில்லை. ஒருவேளை, நாசரிடம் இருந்த பால்வளத்துறையே கூட டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்படலாம் என்றும் பேச்சுகள் ஓடுகின்றன. ஆடு, மாடுகள் அதிகம் வளர்க்கப்படும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவராக டிஆர்பி ராஜா இருப்பதும் இந்தப் பேச்சுக்கு வலு சேர்க்கிறது.
டிஆர்பி ராஜாவுக்கு எந்த துறை வழங்கப்பட உள்ளது, எந்தெந்த துறை யார் யாரிடம் மாற்றி ஒப்படைக்கப்படப் போகிறது, இந்த மாற்றம் திமுகவில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இன்று காலை தெரிந்துவிடும். எனினும், திமுகவினர் மத்தியில் இலாகா விவகாரம் தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.