கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்.. ஜீ நியூஸ் மாபெரும் கருத்துக்கணிப்பில் தகவல்.. இத்தனை சீட்டுகளா?

பெங்களூர்:
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஜீ நியூஸ் தொலைக்காட்சி சார்பில் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் என்றால் அது சந்தேகமே இல்லாமல் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் தேர்தல் என்பதுடன், அசுர வளர்ச்சியுடன் உயர்ந்து நிற்கும் பாஜகவை, காங்கிரஸால் வீழ்த்த முடியுமா என்பதை அறியும் தேர்தலாகவும் இது கருதப்படுகிறது. இதனால் இயற்கையாகவே கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகமானது.

மொத்தம் 224 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டதால் மும்முனை போட்டி அங்கு நிலவியது. ஆரம்பம் முதலாகவே, கர்நாடகாவில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதே சமயத்தில், பாஜகவுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. 113 என்ற மேஜிக் நம்பரை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியும்.

இந்நிலையில், ஜீ நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 103 இல் இருந்து 118 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 79 – 94 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் 25 – 33 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 2 – 5 இடங்களில் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.