தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினரை கண்டித்து கிராம மக்கள் அரசு ஆவணங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள களத்தூரைச் சேர்ந்த கிராம மக்கள், வருவாய்த் துறையினரை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
களத்துார் ஊராட்சியில், களத்துார் கிழக்கு, மேற்கு என 2 கிராமம் உள்ளது. களத்துார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான வயல், தோப்பு, வீட்டு மனை உள்ளிட்டவைகள் என சுமார் 250 ஏக்கர் நிலத்தின் கிரயப்பத்திரம், பட்டா, கணினி சிட்டா, வீட்டு வாி ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் களத்துார் மேற்கு என பதிவாகியுள்ளது.
இந்நிலையில், களத்துார் ஊராட்சிக்குட்ப்பட்ட மற்றொரு பகுதியான சூரிய நாராயணபுரம் கிராமத்துடன், களத்துார் மேற்கு பகுதியில் உள்ள சுமார் 184.62 ஏக்கர் நிலத்தை இணைப்பதாக வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களாக, ஆன்லைன் மூலம் சிட்டா வழங்குவதையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், ஏற்பட்ட குளறுபடியால், விவசாயிகள், பொதுமக்கள் வங்கி, கல்விக் கடன்கள், நில ஆவணங்கள் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய்த் துறையினர் உடனடியாக பழைய முறைப்படி தங்கள் கிராமத்துடனே இந்த விளை நிலங்களுக்குச் சிட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள், அக்கிராம குழுச் செயலாளர் மாறன், தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறியும், வருவாய்த்துறையினரை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.