பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவர். இந்த நிலையில் பகல் 1 மணி வரையில் 44.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகளும் முற்பகல் 11 மணி வரை 21 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இந்த முறை கர்நாடகாவில் பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடகாவில் இந்த முறை, ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.