வெம்பக்கோட்டை | அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சி அரங்கம் மே.13-ல் திறப்பு

சாத்தூர்: வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கண்காட்சி அரங்கை இம்மாதம் 13-ம் தேதி அமைச்சர்கள் திறந்துவைக்க உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து 2ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மாதம் தொடங்கின. இந்த அகழாய்வில், நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்கக் காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்றுவரும் 2ம் கட்ட அகழாய்வு பணிகளும் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்காலப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி அரங்கில், வெம்பக்கோட்டை பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அகழாய்வு நடைபெறும் இடத்தை நேரடியாகப் பார்வையிடுவதோடு, இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்காலப் பொருள்களையும் அதன் சிறப்புகளையும் அறிந்துகொள்ளச் செய்யும் வகையில் இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாதம் 13ம் தேதி வருவய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் இக்கண்காட்சி அரங்கைத் திறந்துவைக்க உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.