மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்க மாநில கல்விக் கொள்கை குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில கல்வி கொள்கை குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவகர் நேசன் திடீரென இன்று ராஜினாமா செய்து உள்ளார். இது குறித்து பேசி அவர் தேசிய கல்விக்கொள்கையின் பாதையிலும் தனியார் கார்பரேட் கல்விக்கொள்கையின் திசையிலும் மாநிலக் கல்விக்கொள்கையை கொண்டு செல்ல சில அதிகாரிகள் முனைப்புக் காட்டுகிறார்கள்.
எந்தச்சூழலிலும் நான் அரசைக் குற்றம் சொல்ல விரும்பவில்லை. சில அதிகாரிகள் மிக அதிகமாக தலையிட்டு குழு உறுப்பினர்களை மிரட்டுவதும், சில உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர். குழுவின் உறுப்பினராக அந்த தலையீடுகளைத் தடுக்க வேண்டியது எனது கடமை.
கடந்த ஜனவரிக்குப் பிறகு நிலை கட்டுக்குள் இல்லை. மத்திய கல்விக்கொள்கைக்கு உடன்பட்டு கார்பரேட் கல்விக்கொள்கையை உருவாக்கும் பணிதான் நடைபெற்று வருகிறது. மாநில கல்விக் கொள்கை குழுவில் என்ன விவாதிக்க வேண்டும் என்பதை குழு தீர்மானித்தால் பிரச்னையில்லை. கல்வி கொள்கை இல்லாத சில அதிகாரிகள் தீர்மானிக்கிறார்கள்.
அதை மாநிலக் கல்விக் கொள்கை குழு தலைவர் ஏற்றுக்கொள்கிறார். இதனால் ஜனநாயகமே இல்லாமல் போய்விட்டது. உதயச்சந்திரன் போன்றோர் ஒரு கருத்தைச் சொல்லும்போது மற்றவர்கள் அதைக் கேட்டுச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். குழு இயங்கத் தொடங்கி 11 மாதங்கள் ஆகின்றன. முதல் நாளே கல்விக்கொள்கையை எப்படி வகுப்பது என பட்டியல் போட்டு மூன்று ஆவணங்கள் சமர்ப்பித்தேன்.
அதற்குப் பிறகும் ஏராளமான தரவுகளை தந்திருக்கிறேன். அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்று கல்விக்கொள்கையை வகுப்பார்கள் என்று உதயச்சந்திரன் சொன்னபோது நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீ்ர்மானிக்கும் கொள்கை இவ்வளவு காலம் போய்விட்டது. இன்னும் ஆறுமாத காலம் எடுத்துக்கொண்டு தீர விவாதித்து கொள்கையை வகுக்கலாம் என்பதை யாரும் கேட்கவில்லை.
மற்ற உறுப்பினர்கள் ஓரிரு பக்கங்களில் தந்துள்ள பரிந்துரைகளை வைத்துக்கொண்டு இந்த மாதமே முடித்துவிட மாநில கல்வி கொள்கை குழு தலைவர் அவசரம் காட்டுகிறார். அனைத்து பரிந்துரைகளையும் முன்வைத்து எல்லோரும் அமர்ந்து விவாதம் செய்த பிறகே கொள்கையை முடிவு செய்யவேண்டும் என்பது என் கருத்து.
நான் இது மாதிரியான விஷயங்களில் முரண்படுவதால் உதயச்சந்திரன் அவருடைய அறைக்கு என்னை அழைத்து மிரட்டினார். நான் சொல்வதற்கு ஒத்துப்போகாவிட்டால் கமிட்டியை கலைத்துவிடுவேன். என்னை மீறி கல்விக்கொள்கை வராது. என் அதிகாரிகளும் உங்கள் கூட்டத்தில் பங்கேற்று கொள்கை முடிவுகளில் பங்களிப்பு செய்வார்கள் எனக் கூறுகிறார். அதற்கு மேல் நான் அங்கு இருப்பது சரியாக இருக்காது என்பதால் தான் ராஜினாமா செய்கிறேன்” என பேராசிரியர் ஜவஹர் நேசன் தெரிவித்துள்ளார்.