புதுச்சேரி மாநிலத்தில் 10 நகரங்கள்,92 கிராமங்கள் என அனைத்து கிராமங்களிலும் கடந்த 1972ம் ஆண்டே மின் இணைப்புக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
தற்போது மாநிலத்தில், 3,77,635 வீட்டு மின் இணைப்புகளும், 533 உயர் மின்னழுத்த தொழிற்சாலை இணைப்புகளும், 4408 குறைந்த மின்னழுத்த தொழிற்சாலைகள் இணைப்புகளும், 7053 விவசாய மின் இணைப்புகள் உள்ளன.
மாநிலத்தில் மின் உற்பத்திக்கான பெரிய வாய்ப்புகள் இல்லாததால், பிற மாநிலங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலத்தின் ஆண்டு மின் தேவை 585.81 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தாண்டு ரூ. 1690 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மின்துறை அனுப்பியகோப்பிற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
அதனையொட்டி மின் கொள்முதல் செய்வதற்கான பணிகளை மின்துறை விரைவில் துவங்க உள்ளது. ரூ.1,690 கோடிக்கு கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தை ரூ.1,800 கோடிக்கு நுகர்வோர்களிடம் விற்க அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு 3231.04 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ரூ. 1,375 கோடி கொடுத்து வாங்க மத்திய மின்சார இணை ஒழுங்கு ஆணையம் அனுமதி கொடுத்து இருந்தது.
ஒரு யூனிட் மின்சாரத்தினை 4.25 ரூபாய் என கணக்கிட்டு புதுச்சேரி அரசு கொள்முதல் செய்திருந்தது.
எனவே இந்தாண்டும் மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
சூரியன் இருக்கு…
நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையை அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஒவ்வொரு மாநிலமும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமைக்கு குறிப்பிட்ட சதவீதம் மாற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட காலமாக சூரிய மின்சாரம் கொள்முதல் திட்டம் பெரிய அளவில்செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தை போல் கடலில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பில்லை என ஏற்கனவே ஆய்வுகள் கைவிரித்துவிட்டது.
எனவேமாநிலத்தில் தற்போதைக்கு சூரிய மின் உற்பத்தி மட்டுமே சாத்தியம் என்ற நிலை உள்ளது. எனவே அரசு கட்டடங்கள் மட்டுமின்றி பொதுமக்களின் வீடு, தனியார் நிறுவன கட்டடங்கள், பொது இடங்களில்சூரிய மின்சார உற்பத்தி திட்டத்தினை பெரிய அளவில் அரசு செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.
இத்திட்டத்தினை அதிக மானியத்துடன் செயல்படுத்தி,மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க செய்தால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மின்சாரத்திற்கு செலவிடுவது மிச்சமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்