சென்னை:
மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதை அடுத்து, திருவாரூர் மாவட்ட திமுகவினர் கொதித்து போய் உள்ளனர். திருவாரூர் திமுக எம்எல்ஏவான பூண்டி கலைவாணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டர்களில் கட்சித் தலைமைக்கு எச்சரிக்கும் விடும் விதமான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு – டி.ஆர்.பி.ராஜா பேச்சு .
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக இருக்கும் ஒரே டாக், அமைச்சரவை மாற்றம் தான். இன்று இருக்கும்.. நாளை இருக்கும்.. என கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு முதல்கட்ட அமைச்சரவை மாற்றத்துக்கான அறிவிப்பு வெளியானது. பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டார்.
அதேபோல, புதிய அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டார். இது முதல்கட்ட மாற்றம்தான். நாளை அல்லது நாளை மறுதினமே பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் இருக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆடியோ புகாரில் சிக்கிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வசம் இருந்த நிதித்துறை, தங்கம் தென்னரசுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதேபோல, சீனியர் அமைச்சரான துரைமுருகன், மனோ தங்கராஜ் உட்பட பல அமைச்சர்கள் வசம் உள்ள துறைகளும் மாற்றப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும், திருவாரூர் முழுவதும் அவர்கள் போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டர்களில், “திருவாரூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றி, கழகத்திற்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும். கழகத்திற்காக நாங்கள் இல்லை. எங்கள் கலைவாணனுக்காக மட்டுமே கழகத்தில் இருக்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பூண்டி கலைவாணனின் மகன்களான கலை, அமுதன் ஆகியோரும் தங்கள் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்கள். அதில், “நேற்று அப்பாவிடம் கழக உறுப்பினர்கள்: நம் மாவட்ட கழகத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் இஷ்டப்பட்டு செய்றீங்க! எவ்வளவு செலவு, போராட்டம், ஜெயில். ஆனால் அங்கீகாரம் வேறொருவருக்கா?”
அப்பாவின் பதில்: நம் வீட்டிற்கு வேலி நான் கட்டாமல், வேறு யாராவது கட்டுவாங்கனு நினைத்துக் கொண்டு இருக்க முடியுமா” என்றார்.
நம் மாவட்ட கழகத்தை தன் வீடாக நினைக்கும் இவர் மனதிற்கு நல்லதே நடக்கும். நீங்கள் என் இணையற்ற ஹீரோ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.