தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி,

அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவந்தது.

இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தல் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம் தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப்பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு சட்டத்தை கொண்டு வந்தது.

ரத்துசெய்த ஐகோர்ட்டு

மத்திய அரசு சட்டம் கொண்டுவந்து 1½ ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு விசாரித்தது. நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2015-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, இந்த சட்டத்தின்கீழ் 2013-ம் ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இடைக்கால தடை

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி நடந்த விசாரணையில், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரிக்கவும் ஐகோர்ட்டுக்கு தடை விதித்தது.

பொதுநல மனு தள்ளுபடி

இதற்கிடையே ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட சட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.மோகன் ராவ் உள்ளிட்ட 55 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பில் மனுதாரர்களின் வாதங்களை ஏற்க முடியாது, மாநில அரசின் உரிமைக்கு உட்பட்டு இருப்பதாலும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி இருப்பதாலும், தமிழ்நாடு அரசின் 2019-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் செல்லும். எனவே, இதற்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தது.

இதற்கிடையே இதே விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த சி.எஸ்.கோபாலகிருஷ்ணன், வி.திருநாராயண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பு கூறியுள்ளது.

அந்த தீர்ப்பின் அம்சங்கள் வருமாறு:-

நெடுஞ்சாலை சட்டம் செல்லும்

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் நில கையப்படுத்துதலில் ஏற்படுத்தும் தவிர்க்கக்கூடிய தாமதத்தை தடுக்கும் நோக்கில் உள்ளது.

நிலம் கையகப்படுத்தலுக்கான புதிய சட்டத்தின் ஒப்பிடுகையில், நெடுஞ்சாலை சட்டத்தில் உள்ள விதிகள், நடைமுறைகளுக்கான வேறுபாடுகள், பாகுபாடுகள் இருப்பதாக முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறோம். தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.