சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘மொக்கா’ என்று பெயரிட்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக மாறுகிறது.
வங்கக் கடலில் கடந்த 8-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது. தொடர்ந்து, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்தது.
நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘மொக்கா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது படிப்படியாக தீவிரமாகி இன்று (மே 11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
தொடர்ந்து, வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, மே 13 முதல் வலு குறைந்து, மே 14-ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையைக் கடக்கக் கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 130 கிலோமீட்டர் வேகத்திலும் இருக்கும்.
இந்தப் புயலால், தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மே 11) முதல் வரும்14-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்கும். அடுத்த 3 நாள்களுக்கு இயல்பான வெப்பநிலையைக் காட்டிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 3 நாள்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.