சென்னை: மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜா, இன்று அமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3வது ஆண்டு தொடங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில், அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கப்பட்டது. சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக நடத்த 2வது அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர்கள் ஐ பெரியசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்டோருக்கு இலாகாக்கள் மாற்றி வழங்கப்பட்டன. மூன்றாவது அமைச்சரவை மாற்றமாக, திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, டிஆர்பி ராஜா அமைச்சரவையில் இன்று சேர்க்கப்படுகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளராக உள்ளார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் அவருக்கு, ஆளுநர் ஆர்என் ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். தமிழக அமைச்சரவையில் முதல்வரையும் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ளனர். டிஆர்பி ராஜா எந்த துறைக்கு அமைச்சராக இருப்பார் என்பது அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்படும். அதோடு, மற்ற அமைச்சர்கள் யார் யாருக்கு என்ன இலாகாக்கள் மாற்றப்படுகின்றன என்பதற்கான அறிவிப்பும் வெளியாகும்.