சென்னை: Sivaji Re Release (சிவாஜி ரீ ரிலீஸ்) ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் ரீ ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் ரஜினி ரொம்பவே அப்செட்டாக இருந்தார். இதனையடுத்து ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்பதால் இளம் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். பீஸ்ட் படத்துக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் நெல்சன் மீது பெரும் நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் ரிலீஸ்: பீஸ்ட் படத்தால் நெல்சன் திலீப்குமார் சந்தித்த விமர்சனம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இதனால் இந்தப் படத்தின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டிய முனைப்பில் இருக்கிறார். எனவே படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேமாக செதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸும் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. எனவே நெல்சனும், ரஜினியும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
செண்ட்டிமெண்ட்டை உடைக்குமா ஜெயிலர்?: ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்கள் ஆகஸ்ட் மாதம்தான் ரிலீஸான்வை. ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் படுதோல்வியையே பரிசாக கொடுத்தன. இதனால் அந்த செண்ட்டிமெண்ட்டுக்குள் சிக்கி ஜெயிலரும் தோல்வியடைந்துவிடுமோ என ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் கவலையில் இருக்கின்றனர். இருந்தாலும் நெல்சனின் மேக்கிங்கும், ரஜினியின் நடிப்பும் துணை இருப்பதால் நிச்சயம் அந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்து ஜெயிலர் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையிலும் இருக்கின்றனர்.
ரீ ரிலீஸ்: இந்நிலையில் ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் அதற்கு முன்னதாக ரஜினி நடித்து 2007ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படம் ரீ ரிலீஸாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சிவாஜி படமானது, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் ரீ ரிலீஸ் ஆகும் எனவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிவாஜி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மெகா ஹிட்டான சிவாஜி: பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் ரஜினியுடன் முதல்முறையாக இணைந்த படம் சிவாஜி. ரஜினி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருந்தது. படம் வெளியான சமயத்தில் அதுவரை கோலிவுட்டில் மற்ற திரைப்படங்கள் செய்திருந்த வசூல் சாதனையை அசால்ட்டாக முறியடித்தது. அதனையடுத்து ஷங்கரும், ரஜினியும் எந்திரன், 2.0 படங்களில் இணைந்து பணியாற்றினார்.
இந்த ரீ ரிலீஸ் வெற்றி பெறுமா?: ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் பாபா படம் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அந்தப் படம் சில மாதங்களுக்கு முன்னர் ரீ ரிலீஸானது. அதனை ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை பாபா ரீ ரிலீஸ் கொடுக்கவில்லை. எனவே சிவாஜி ரீ ரிலீஸாவது ரஜினிகாந்த் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸை பெற்றுக்கொடுக்குமா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.