புதுடெல்லி: அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார்.
இது குறித்த அறிவிப்பை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டதை அடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதனை உறுதிப்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய குடியரசின் பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 22ம் தேதி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் அவரை வரவேற்பார்கள். அவருக்கு இரவு விருந்தும் அளிக்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமரின் அமெரிக்க பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில்துறை, கல்வி, ஆராய்ச்சி, மின்உற்பத்தி, பாதுகாப்பு, சுகாதாரம், மக்கள் தொடர்பு ஆகியவற்றில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள்.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, வளம், பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக இந்த சந்திப்பு அமையும். மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என இந்தி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.