பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைதும், அவர் கைது செய்யப்பட்ட விதமும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? முன்னாள் பிரதமரை அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய கட்டாயமும் அதன் பின்னணி என்ன…
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பே தனது பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்திருந்தார் இம்ரான் கான். அவர் மீது வன்முறையை தூண்டுவது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. ஜாமீன் கிடைக்க வாய்ப்பற்ற பல வழக்குகளும், ராணுவத்திற்கு எதிராகப் பேசிய வழக்கும் அதில் அடக்கம் என்கிறார்கள்.
கைதும் காட்சியும்…
மே 9-ஆம் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஜாமீனை புதுப்பிக்க வந்திருந்தார் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். வெளியில் வந்தபோது 100க்கும் மேற்பட்ட ரேஞ்சர்கள் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் அவரை குண்டுக்கட்டாக கைது செய்து காட்சிகள் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சர்வதேச அரசியல் நோக்கர்கள், “இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்ற பேச்சு நீண்ட நாள்களாகவே அடிபட்டு வருவதுதான். அவரை கைது செய்வதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது கைதாகியுள்ளார். அவர்மீதான ஊழல், சட்டவிரோதமாக நிலம் வாங்கியது, பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீது ஏற்கனவே நோட்டிஸ் அனுப்பட்டுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளைக்கு வந்த நிதிகளை முறைகேடாக இம்ரான்கான் கையாண்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பற்றி எரியும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைதானதால் அவரின் ஆதரவாளர்கள் பலர் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் இஸ்லாமாபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இம்ரான் கான் கைதான செய்தி காட்டுத்தீயாகப் பரவியதால் நாடு முழுக்கவே பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனைத் தொடர்ந்து கராச்சி, பெஷாவர் மற்றும் லாகூர் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
போலீஸ் மற்றும் ராணுவ வாகனங்கள் சூறையாடப்படுகிறது. ராணுவ அதிகாரிகளின் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய நகரங்களில் 144 தடை விதித்ததோடு இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர், வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கின. பாகிஸ்தான் மட்டுமின்றி பிரிட்டன், கனடா போன்ற நாடுகளிலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.
கிடைக்குமா ஜாமீன்?
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வழக்குகள் தற்போது National Accountability Bureau என்ற தன்னாட்சி அமைப்பின் வசம் இருக்கிறது. இம்ரான்கானின் ஜாமீன் குறித்து NAB அமைப்பு என்ன முடிவெடுக்க போகிறது. ஆளும் தரப்பின் தலையீடு எவ்வாறாக உள்ளதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இம்ரான் கான் ஆட்சியில் இந்த அமைப்பு மிக வலுவாக இருந்ததாகவும், அவர்கள் நினைத்தால் ஓராண்டு கூட சிறை வைக்கலாம் என்ற நிலை இருந்ததாகவும் தெரிகிறது.
தற்போதைய புதிய அரசு NAB அமைப்பின் பல்வேறு அதிகாரங்களைக் குறைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். மேலும் பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி வருவதால் இம்ரான் கானுக்கு எளிதாகவே ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் பரவலாக பேசப்படுகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும் இந்த ஆண்டு பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுமென்ற பேச்சும் கோரிக்கையும் நிலவுகிறது. தேர்தலுக்குள் வெளியாவாரா இம்ரான் கான், இந்த கைது அவரது அரசியல் மைலேஜை அதிகரிக்குமா என்பதே பாகிஸ்தானின் ஹாட் டாக்.