மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் ‘NMACC’ எனப்படும் பண்பாட்டு மையத்தை நீடா அம்பானி திறந்து வைத்தார். இந்நிலையில் கிரிக்கெட் பிரபலம் சச்சின் டென்டுல்கர் தொடங்கி சினிமா பிரபலம் ரஜினிகாந்த் வரை பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி பாட்டுப்பாடி அசத்தியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு கனவு இருந்தது. வெளிநாடுகளில் இருப்பதை போல ஒரு கலாச்சார மையத்தை உருவாக்குவதுதான் இந்த கனவு. கடந்த சில ஆண்டுகளாக இதற்கான முயற்சியை இவர் மேற்கொண்டு வந்திருந்தார். ஆனால் கலாச்சார மையத்தை உருவாக்க முடியவில்லை. இருப்பினும் முயற்சியை கைவிடாத நீடா அம்பானி ஒரு வழியாக ஏப்ரல் 1ம் தேதியன்று இந்த கலாச்சார மையத்தை மும்பையின் பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் திறந்து வைத்தார்.
வெளிநாடுகளில் தலைச்சிறந்த கலைஞர்களின் படைப்புகள் விற்பனைக்காக காட்சிப்படுத்த இது போன்று கலாச்சார மையங்கள் இருக்கும். இந்த மையங்களில் அந்நாட்டின் தலைச்சிறந்த உள்நாட்டு தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருக்கும். இந்தியாவில் இதுபோன்ற கலாச்சார மையங்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. எனவே இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று நீடா அம்பானி கனவு கண்டிருந்தார். இந்த கனவுதான் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேறியிருக்கிறது.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த கலாச்சார மையம் புனித பயணம் போன்றது. சினிமா, இசை, நடனம், நாடகம், இலக்கியம், கைவினைப் பொருட்கள், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவை சார்ந்து இயங்கும் ஒரு இடமாகவும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்குமான இடமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “நமது நாட்டில் ஏராளமான கைவினை பொருட்கள் இருக்கிறது. தனித்துவமிக்க இந்த பொருட்களை சர்வதேச அளவில் காட்சிப்படுத்த பிற வெளிநாட்டு நிறுவனங்களைதான் நாம் நம்பிக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது. இதை சாத்தியமாக்கத்தான் இந்த கலாச்சார மையம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்று இனி நம் நாட்டின் தனித்துவமிக்க பொருட்கள் சர்வதேச மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த கலாச்சார மையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2000 பேர் வரை அமர்ந்து பார்க்க கூடிய அளவு பிரமாண்டமான சினிமா தியேட்டர் இருக்கிறது. இன்னும் ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அதேபோல இந்த கலாச்சார மையத்தில் நுழைய மாணவர்கள், சிறுவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அனுமதி இலவசம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் முகேஷ் அம்பானி பாட்டு பாடி அசத்தியுள்ள வீடியோ அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
பொதுவாக கோடீஸ்வரர்கள் எனில் அவர் மிடுக்காகவும், முகத்தில் எவ்வித உணர்ச்சிகளற்றும் இருப்பார்கள். ஆனால் முகேஷ் அம்பானி மிகவும் எளிமையாக சாதாரணமாக எவ்வித மிடுக்கும், மிரட்டும் தோரணையும் இன்றி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த வீடியோவில் நீடா அம்பானி, “என்ன பாடலாம்” என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதனையடுத்து ‘Congratulations and celebrations’ எனும் ஆங்கில பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்த பாட்டுக்கு அனைவரும் உற்சாகமாக கைதட்டி வரவேற்றுள்ளனர். பின்னர் அவர் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இந்தியாவின் முதன்மை பணக்காரர் நிகழ்ச்சி ஒன்றில் சாதாரணமாக பாட்டு பாடி அசத்தியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.