காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷலவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.05.2023) கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
அத்துடன் கடுவளையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால், பியத் நிகேஷல தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் இதன்போது கேள்வி எழுப்புள்ளார்.
மேலும், பியத் நிகேஷலவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கடுவலை துணை மேயர் ஆற்றிற்குள் இழுத்துச்செல்லப்பட்ட காணொளியினை பதிவேற்றியமைக்காக சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல – கொஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (10.05.2023) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை கடுவலை மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.