தமிழ்நாடு அமைச்சரவையில் மூன்றாவது முறையாக மாற்றம் செய்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு. இந்த முறையும் புதிதாக ஒருவர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். கடந்த முறை உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டுத்துறை மட்டும் பிரித்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதோடு சிறிய அளவிலே மாற்றம் இருந்தது. ஆனால், இந்த முறை பால்வளத்துறையைக் கவனித்து வந்த அமைச்சர் நாசர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னார்குடி எம்.எல்.ஏ ராஜா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விடுவிப்புக்கும் சேர்ப்புக்கும் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த முறையில் அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வசமிருந்த நிதித்துறை தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை முறையே டி.ஆர்.பி.ராஜாவிடமும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தில் நீண்ட நாள்களாக பேசுபொருளாக இருந்தது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை வேறொருவருக்கு மாற்றப்படும் என்பதுதான். அது இந்த முறை நடந்துள்ளது. வெளிநாட்டில் பொருளாதரக் கல்வி, வேலை, நிதி விவகாரங்களில் மத்திய அரசுக்கே கடும் சவாலாக இருந்தவர் எனப் பல்வேறு வகையில் எதிர்பார்க்கப்பட்ட பி.டி.ஆரிடமிருந்து ஏன் நிதித்துறை பறிக்கப்பட்டது?
நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், “தமிழ்நாடு அமைச்சரவையில் அதிக விமர்சனத்துக்குள்ளானவர் பி.டி.ஆர்.-தான். உள்ளூர் அரசியல் தொடங்கி கோட்டையில் பிற அமைச்சர்களோடு இணக்கமாகச் செல்லாதது வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் பி.டி.ஆர் மீது கட்சி நிர்வாகிகளும் சீனியர் அமைச்சர்களும் முன் வைத்து வந்தனர். அவரை மாற்ற வேண்டும் என முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் பலர் செனடாப் சாலையில் பல நாள்கள் காத்துக்கிடந்தனர். ஆனால், முதல்வர் அது எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. அதனால், கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரிய அவப்பெயர் ஏற்படுகிறது என்ற உளவுத்துறையின் குறிப்பு முதல்வரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிட்டது.
அவரும் விசாரித்ததில் நிதியைக் காரணம் காட்டி, அனைத்து பைல்களையும் கிடப்பில் போடுகிறார் என்பதும் தெரிய வந்தது. அதோடு ஆடியோ விவகாரம், லோக்கல் அரசியல் விமர்சனங்களும் சேர்ந்துகொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திட்டங்களைச் செயல்படுத்தாமல் நிதியைக் காரணம் காட்டி எல்லாவற்றையும் தள்ளிப்போடுவது சரியாக இருக்காது என்பதாலேயே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.” என்றவரிடம் ஏன் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை கொடுக்கப்பட்டது என்ற கேள்வியை முன் வைத்தோம்.
“எல்லோருடனும் அனுசரித்துச் செல்பவர். எளிதில் அணுகக்கூடியவர். தமிழ்நாடு அரசியலை நன்றாகக் கற்றவர். தன்வசமிருந்த தொழில்துறையைச் சிறப்பாகக் கையாண்டவர் எனப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இதனால்தான் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.