ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று (10) இடம்பெற்ற முதலாவது ரி 20 கிரிக்கெட் போட்டியில் வளர்ந்து வரும் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டோக்கியோவில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற ஜப்பான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்களை எடுத்தது.
ஜப்பான் அணி சார்பாக கெண்டோல் கடோவகி பிளெமிங் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற மார்கஸ் துர்கேட் மற்றும் ரியோ சகுரனோ ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் இலங்கை அணித் தலைவர் டெலோன் பீரிஸ் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 98 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இதற்கமைய இரு நாடுகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இலங்கை வளர்ந்து வரும் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.