ஈரோடு, பெருந்துறை சாலையில் பிரபல தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில், 4 கார்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மருத்துவமனையின் தலைவர், நிர்வாக இயக்குநர் ஆகியோர் அறைகளிலும், நிர்வாக அலுவலகத்திலும் இருந்த கோப்புகளைப் பார்வையிட்ட அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா… என ஆய்வு மேற்கொண்டனர். இந்தச் சோதனை செவ்வாய்க்கிழமை இரவு வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றும் காலை முதல் இரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய `கருமுட்டை’ விவகாரம் தொடர்பாக, இந்த மருத்துவமனையின் ஆய்வகத்துக்கு அரசு சீல் வைத்தது. பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சீல் அகற்றப்பட்டு, அந்த ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.