சென்னை: இந்தியாவின் பிரதமராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் தேவைப்படுகிறார் என்பதை விவரிக்கும் இந்தி மின்னூல் புத்தகத்தை நாம் திராவிடர்கள் அமைப்பு வெளியிடுகிறது.
தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மேற்கு வங்கம் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இயக்கமாக நாம் திராவிடர்கள் (We Dravidians) அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் செயலாற்றி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமே திராவிடம் பேசப்படுகிறது என்கிற மாயையை உடைக்கும் வகையில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.நாம் திராவிடர்கள் இயக்கத்தின் 8-ம் ஆண்டு விழா, தமிழ்நாட்டு திராவிட மாடல் அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ந் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் இந்தியாவுக்கு திராவிடம் செய்தது என்ன? நரேந்திரர் கால ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இந்தியா வல்லரசா? வல்லாதிக்க அரசா? 3-ம் ஆண்டில் திமுக செய்ததும் செய்ய வேண்டியதும் ஆகிய தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
திமுக மாநில மாணவர் அணி துணைத் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி. திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மதிவதனி, எழுத்தாளர் டான் அசோக், டாக்டர் ஹஃபீஸுல்லா உள்ளிட்டோர் இக்கருத்தரங்கில் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் இந்தியாவின் பிரதமராக மு.க.ஸ்டாலின் ஏன் வரவேண்டும் என்ற இந்தி மின்னூல் புத்தகத்தின் முகப்பு அட்டை வெளியிடப்பட்டது.
இந்நூல் ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்பாகவே ஆங்கிலத்தில் வெளிவந்த நூலின் இந்தி மொழிபெயர்ப்பாகும். பிஹாரைச் சேர்ந்த குமார் அன்குஷ் இந்நூலை மொழி பெயர்த்திருக்கிறார்.
இந்நூல் குறித்து “ஏன் இந்த இந்தி புத்தகம்? ” என்ற தலைப்பில் நடனக் கலைஞர் ஜாகிர் உசேன் உரையாற்றினார்.
இந்நூலின் மின் பதிப்பு வரும் We Dravidians ஆங்கிலப் பதிப்பின் துவக்க நாளான 17 மே அன்று அமேசான் கிண்டிலில் வெளிவருமென்றும்..அச்சுப் பதிப்பு விரைவில் புது தில்லியில் நிகழவிருக்கும் விழாவில் வெளியிடப் படவிருப்பதாகவும் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியவரும் We Dravidians இயக்கத்தின் நிறுவனருமான கதிர் ஆர்எஸ் தெரிவித்தார்