தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் என இருவரில் யாருக்கு அதிகாரம் உள்ளது எனக் கேள்வி எழுந்தது.
உச்ச நீதிமன்ற அமர்வு
இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இவர்கள் இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதாவது, மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு தான் உள்ளது. மாநில அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும்.
மாநில அரசுக்கு அதிகாரம்
அமைச்சரவை பரிந்துரை செய்தால் அதன்படி ஆளுநர் செயல்பட வேண்டும். குறிப்பாக மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்து கொள்ள முடியாது. இதை சரியான முறையில் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு தான் அதிகாரம் உண்டு. அவர்கள் தான் நிர்வாக ரீதியில் முடிவுகளை எடுப்பர்.
டெல்லியில் வெடித்த சர்ச்சை
அந்த வகையில் டெல்லியில் துணைநிலை ஆளுநரை விட முதல்வருக்கே அதிகாரம் உள்ளது. எனவே ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு என உச்ச நீதிமன்ற அமர்வு பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் மாநில அரசுக்கான அதிகாரம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கும் பொருந்தும்
உச்ச நீதிமன்ற உத்தரவை வெறும் டெல்லி அரசுடன் மட்டும் பொருத்தி பார்ப்பதுடன் நிறுத்தி கொள்ள முடியாது. அனைத்து மாநிலங்களுக்குமான உத்தரவாக பார்க்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் ஆளுநர், ஆளும் அரசுக்கு இடையில் பல்வேறு மோதல்கள் உருவாகி வருகின்றன. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சித்தாந்த மோதல்
மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உரசல்கள் ஓரளவிற்காவது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அரசியல் திறனாய்வாளர் தராசு ஷ்யாம், முழு மாநில அந்தஸ்து பெற்ற தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் வராது.
நமது மாநிலத்தில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் என்பது வேறு. ஏனெனில் அதிகாரிகளுக்கும், ஆளுநருக்கும் இடையில் தொடர்பு, அதிகாரிகளுக்கும் முதல்வருக்கும் இடையில் குறுக்கீடு போன்ற சச்சரவுகள் இல்லை. நம்முடைய ஆளுநர் கூறுகின்ற பல்வேறு விஷயங்கள் சித்தாந்த அடிப்படையில் இடம்பெறுகின்றன.
பொதுவான அறிவுறுத்தல்
திராவிடம் என்ற சொல் காலாவதியாகிவிட்டது. தமிழகம் என்று அழைத்தால் பொருத்தமானதாக இருக்கும். இப்படியான விஷயங்களில் தான் முரண்படுகிறார். எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நேரடியான பின் விளைவுகளை நமது மாநிலத்திற்கு ஏற்படுத்தாது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பொதுவான அறிவுறுத்தலாக அமைந்திருக்கிறது எனக் கூறினார்.