சென்னை: கோயம்பேடு லாட்ஜ்ஜூக்குள்ளேயே நுழைந்து, 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது போலீஸ்.. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
1981-ல் டைரக்டர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண்.. இதில் ரஜினிகாந்த் ஒரு சபலபேர்வழியாக நடித்திருப்பார்.
ஒரு காட்சியில் வெளிநாடு சென்று வந்த நண்பர், மாயக்கண்ணாடி ஒன்றை ரஜினிக்கு பரிசாக வழங்குவார்.. அந்த கண்ணாடி, எக்ஸ்ரே திறன் பெற்றது..
போலி கண்ணாடி: அதன்காரணமாக ஆடைகள் இன்றி உடம்பை காட்டும் குணம் கொண்டது என்று சொல்வார்.. கண்ணாடி அணிந்து யாரை பார்த்தாலும், அவர்கள் நிர்வாணமாக தெரிவார் என்பார். இந்த கண்ணாடியை வைத்துதான் சரிதாவை பார்ப்பார்.. அதன்பிறகு கதை நகரும்.. அதுபோலவே பாசிலின் பூவே பூச்சூடவா படத்திலும் இதே போல ஒரு கண்ணாடியை வைத்து நதியா எஸ்வி சேகரை சீண்டி விளையாடுவார்.. இதில் நகைச்சுவையாக இந்த மாயக்கண்ணாடி சீன் இடம்பெற்றிருக்கும்..
சினிமாவில் மட்டும் கேள்விப்பட்ட இந்த கண்ணாடி, நடைமுறையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. 2 வருடங்களுக்கு முன்பு, இப்படி ஒரு கண்ணாடியை வைத்துதான் தேனியில் ஒருவர் சிக்கினார்.. சபலிஸ்ட் ஒருவருக்கு, மாயக்கண்ணாடி தன்னிடம் இருப்பதாகவும், கண்ணாடியின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்றும் ஆசைகாட்டி உள்ளார்.. அந்த நபரும், 1 லட்சம் தந்து கண்ணாடியை வாங்கியுள்ளார்.. அந்த கண்ணாடியை எடுத்து மாட்டியதுமே, ஏமாந்து போயுள்ளார்.. அது ஒரு சாதாரண கண்ணாடி என்பது தெரியவந்தது..
லாட்ஜ் ரூமுக்குள்: இப்போது விஷயம் என்னவென்றால், சென்னையில் ஒரு கும்பல் வசமாக சிக்கியிருக்கிறது. கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு பின்பக்கம், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ஒரு லாட்ஜில் 4 பேர் தங்கியிருந்திருக்கிறார்கள்.. சந்தேகத்திற்குரிய சில நபர்கள், அங்கு ரூம் போட்டு தங்கியிருப்பதாக, சிஎம்பிடி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. அந்த தகவலின் பேரில் போலீஸார் லாட்ஜ் ரூமுக்குள் நுழைந்துள்ளனர்.. அங்கேயிருந்த 4 பேர்களையும் பிடித்து விசாரித்துள்ளனர்.. அவர்கள் வைத்திருந்த பொருட்களையும் சோதனையிட்டனர்..
அப்போது போலி கைத்துப்பாக்கி ஒன்று, 8 தோட்டாக்கள், கை விலங்கு, லீடிங் செயின், போலி அடையாள அட்டைகள், ஒரு பையில், கருப்பு அரிசி 50 கிராம் வைத்திருந்துள்ளார்கள்.. இதைத்தவிர, கோபுரகலசம், மற்றொன்று நிர்வாணமாக காட்டும் கண்ணாடிகள் இருந்துள்ளன.. இதையடுத்து சிவா, குபய்ப், ஜித்து, இர்ஷாத் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.. அவர்களிடம் விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அவர்கள் தந்த வாக்குமூலம்தான் தற்போது வெளியாகி உள்ளது.
மூளை சூர்யா: பெங்களூருவை சேர்ந்தவர் இந்த சூர்யா.. 39 வயதாகிறது.. இவர் ஒரு தொழிலதிபராம்.. இந்த கும்பலுக்கு இவர்தான் தலைவரும்கூட.. மற்ற 3 பேரையும் அழைத்து கொண்டு, கோயம்பேடு லாட்ஜிர் ரூம் போட்டுள்ளார் இந்த சூர்யா.. ஆனால், இவர்கள் இங்கே ரூம் போட்டுள்ளது பற்றி போலீசுக்கு துப்பு தந்தது இன்னொரு தொழிலதிபராம்.. சூர்யா கும்பலால் ஏமாற்றப்பட்டவர் அந்த தொழிலதிபர்.. 5 லட்சத்தை இழந்திருக்கிறார்.. தொல்லியல் பொருட்கள் தருவதாக சொல்லி பணம் பறித்தாராம் சூர்யா..
ஆனால், பொருட்களை தரவில்லை.. எனவே, தன்னுடைய பணத்தை திரும்பப் பெறுவதற்காக சூர்யாவை சந்திக்க வந்தாராம் அந்த தொழிலதிபர்.. அப்போது, அவரை சூர்யா துப்பாக்கியால் மிரட்டியிருக்கிறார்.. இதனால் பயந்துபோன தொழிலதிபர் போலீசுக்கு போன் செய்து, தற்போது கோயம்பேட்டில் ரூம் போட்டுள்ள விஷயத்தை சொல்லி, அவர்களின் மோசடிகளையும் தெரிவித்துள்ளார்.. அப்படித்தான் இந்த கும்பல் போலீசில் சிக்கி உள்ளது.
ட்ரையல்: இந்த கும்பல் பணக்காரர்களுக்கு கண்ணாடியை, ‘ட்ரையல்’ காட்டுவதாக சொல்லி வீடியோக்களை காண்பித்து நம்பவைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, சிலரை ரகசிய அறைக்கு வரவைத்து நிர்வாண மாடல்களை நடிக்க வைத்து ஏமாற்றியும் இருக்கிறார்களாம்.. அந்தவகையில், 2 நிர்வாண கண்ணாடிகளை சூர்யா விற்றுள்ளார்..
நிஜம் கிடையாது: ஒரு கண்ணாடி, 1 கோடி ரூபாயாம்.. ஆனால், அது போலியான கண்ணாடி.. சாதாரண கண் கண்ணாடியை, நிர்வாண கண்ணாடி என்று ஏமாற்றியிருக்கிறார்.. தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டியதுகூட, பொம்மை துப்பாக்கியாம்.. அதுகூட நிஜம் கிடையாதாம்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. பல கட்டுக்கதைகளை சொல்லி, கவர்ச்சி பொருட்களை விற்று மோசடி செய்த சூர்யா கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.